60 நாட்களுக்குள் நிலுவை தொகை 'டான்ஸ்டியா' கோரிக்கை
60 நாட்களுக்குள் நிலுவை தொகை 'டான்ஸ்டியா' கோரிக்கை
ADDED : ஜூன் 02, 2024 02:00 AM

கோவை:சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வாயிலாக, சரக்கு மற்றும் சேவைகளைப் பெற்ற பெரு நிறுவனங்கள், அதற்காக வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க தாமதித்து வந்ததால், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் ஜி.எஸ்.டி., செலுத்துவதற்கு சிரமப்பட்டன.
எம்.எஸ்.எம்.இ., சட்டம் 2006ன் படி, இந்த நிலுவைத் தொகையை 45 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான நிறுவனங்கள் பின்பற்றவில்லை.
இதையடுத்து, மத்திய அரசு வருமான வரி சட்டம் 43 பி (ஹெச்) திருத்தம் கொண்டு வந்து, நிலுவைத் தொகையை, 45 நாட்களுக்குள் கிடைக்க வகை செய்தது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், '45 நாட்களுக்குள் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்ற விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்படும்' என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந் தொழில்கள் சங்க (டான்ஸ்டியா) மாநில துணைத்தலைவர் சுருளிவேல் கூறுகையில், ''45 நாட்களுக்குள் பணம் வழங்க வேண்டும் என்பது, குறு நிறுவனங்களுக்கு வசதியாக இருந்தது. பெரு நிறுவனங்களுக்கு சிரமமாக இருந்ததால், நிறைய குறு நிறுவனங்களுக்கு ஜாப் ஆர்டர் வழங்க அவை தயங்குகின்றன.
''மேலும், எம்.எஸ்.எம்.இ.,லிருந்து வெளியேறும்படி பெருநிறுவனங்கள் நிர்பந்திக்கின்றன. பிரச்னைக்குத் தீர்வு காண, இந்த நடைமுறையை முற்றிலும் நீக்குவது சரியாக இருக்காது. கால அவகாசத்தை, 60 நாட்களாக நீட்டிக்கலாம். இது, இரு தரப்புக்கும் பயனளிக்கும்,'' என்றார்.
நிலுவை தொகையை வழங்குவதற்கான கால அவகாசத்தை, 45 நாட்களிலிருந்து 60 நாட்களாக நீட்டிக்கலாம்