ADDED : பிப் 26, 2025 11:44 PM

புதுடில்லி:மின்சார பைக்குகளை தயாரிக்கும் 'ரிவோல்ட்' நிறுவனம், இந்த ஆண்டிற்குள், புதிய பங்கு வெளியீடு வாயிலாக, பங்குச் சந்தையில் நுழைய திட்டம் உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைவர் அஞ்சலி ரத்தன் கூறியதாவது:
முதலில், மாத விற்பனையை 2,000த்தில் இருந்து 5,000மாக அதிகரிப்பதில் கவனம் செலுத்த உள்ளோம். அதை தொடர்ந்து முதலீடு பெற்று, தென் இந்தியாவில் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்கும் திட்டம் உள்ளது. இதை தொடர்ந்து, புதிய பங்கு வெளியீடு வாயிலாக முதலீடு திரட்ட உள்ளோம்.
தென் இந்தியர்களுக்கு நல்ல திறமை உண்டு, அதனால், இரண்டாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அங்கு அமைக்க உள்ளோம். தற்போது, அதை அமைப்பதற்கான வேலை நடந்து வருகிறது. சந்தைப்படுத்துதல் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பம் கொண்ட தரமான பைக்குகள், விற்பனையை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரிவோல்ட் நிறுவனத்தை, 2017ல், 'மைக்ரோமேக்ஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா துவங்கினார். 2022ல் இந்த நிறுவனத்தை, 'ரத்தன் இந்தியா எண்டர்பிரைசஸ்' கையகப்படுத்தியது. இந்த நிறுவனம், ரிவோல்ட்டில் 500 கோடி ரூபாய் முதலீடு செய்தது.

