ADDED : ஜூலை 04, 2024 01:51 AM

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 34 சதவீதம் குறைந்துஉள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில், பாசுமதி அல்லாத பச்சரிசி ஏற்றுமதி 78 சதவீதம் சரிந்து, கிட்டத்தட்ட மூன்று லட்சம் டன்னாக இருந்தது.
இதேபோல் குருணை அரிசி ஏற்றுமதியும், 8 சதவீதம் சரிந்து, மூன்று லட்சம் டன்னாக இருந்தது. இதே காலகட்டத்தில், புழுங்கல் அரிசி ஏற்றுமதி, 11 சதவீதம் சரிந்து, 15 லட்சம் டன்னாக இருந்தது.
கடந்த 2022 செப்டம்பரில், குருணை அரிசி ஏற்று மதிக்கு, மத்திய அரசு தடை விதித்தது. பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கும் கடந்தாண்டு ஜூலையில் தடை விதிக்கப்பட்டது. இதுபோக, புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு, மத்திய அரசு 20 சதவீதம் வரி விதித்து இருந்தது.
ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட இத்தடைகளே, அரிசி ஏற்றுமதி குறைந்ததற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம் உள்ளிட்ட வர்த்தக அமைப்புகள், அரிசி மீதான ஏற்றுமதி தடையை நீக்கக்கோரி, மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், நிலையான வரியில் ஏற்றுமதியை அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.