ADDED : ஜூன் 21, 2024 11:39 PM

நியுயார்க்:ரஷ்யாவின் 'கேஸ்பர்ஸ்கை லேப்' நிறுவனத்தின் வைரஸ் தடுப்பு மென்பொருட்களின் விற்பனைக்கு, அமெரிக்கா தடை விதித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, அரசு இம்முடிவை எடுத்துள்ளதாக, அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜினா ரைமாண்டோ தெரிவித்துள்ளார். கேஸ்பர்ஸ்கை மென்பொருளைப் பயன்படுத்தி, அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து, ரஷ்யா அதை சைபர் தாக்குதல்களுக்கு ஆயுதமாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.
ஆகையால், தற்போதைய புவிசார் அரசியல் நிலையைக் கருத்தில் கொண்டு, இந்நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா உள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த கேள்விகளுக்கு ரஷ்ய துாதரகம் பதிலளிக்கவில்லை. முன்னதாக கேஸ்பர்ஸ்கை, தங்களது நிறுவனம் ரஷ்ய அரசுடன் எந்த தொடர்பும் இல்லாத, ஒரு தனிநபரால் நிர்வகிக்கப்படும் நிறுவனம் என்று தெரிவித்திருந்தது.