திட்டமிட்டு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி மவுனம் கலைத்தார் 'செபி' மாதவி
திட்டமிட்டு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி மவுனம் கலைத்தார் 'செபி' மாதவி
ADDED : செப் 14, 2024 01:37 AM

புதுடில்லி:தங்கள் மீதான முறைகேடு புகார்கள் தவறானவை; திட்டமிட்டு, அவப்பெயர் ஏற்படுத்த நடக்கும் முயற்சி என, 'செபி' தலைவர் மாதவி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச்
தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:
எங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டு வெளியிடப்பட்ட புகார்கள் தவறானவை; உண்மையில்லாதவை. எங்களது வருமான கணக்கு தாக்கல் விபரங்களின் அடிப்படையில், இந்த புகார்கள் கூறப்பட்டுள்ளன.
மோசடியாகவும் சட்டவிரோதமாகவும் தனிநபர்களின் வருமான கணக்கு தாக்கல் விபரங்களைப் பெற்று, இது நடைபெற்று உள்ளது. இது தனிநபர் ரகசியத்தன்மையை மீறிய செயல்.
செபியில் பணியில் சேர்ந்த பிறகு, குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ள 'அகோரா அட்வைசரி, அகோரா பார்ட்னர்ஸ், மஹிந்திரா குழுமம், பிடிலைட், டாக்டர் ரெட்டீஸ், அல்வாரஸ், மார்சல், கெம்ப்கார்ப், விசு லீசிங்' ஆகிய நிறுவனங்கள் தொடர்பாக எந்த கோப்பும் எங்களால் கையாளப்படவில்லை.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் கூடுதலாக ஊதியம் பெற்று வந்ததாக கூறப்படுவதிலும் உண்மைஇல்லை.செபியின் அனைத்து விதிமுறைகளின்படியும் நிதிநிலை குறித்த சுயவிளக்கத்தையும் அளித்துள்ளோம். தாமாக முன்வந்து அவ்வப்போது எங்கள் நிதிநிலை விபரங்களை வெளியிட்டு வந்துஉள்ளோம்.இவ்வாறு அறிக்கையில் அவர்கள் தெரிவித்து
உள்ளனர்.
செபி தலைவர் பதவியைப் பயன்படுத்தி, மாதவி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் பல்வேறு முறைகேடு களில் ஈடுபட்டதாக 'ஹிண்டன்பர்க்' நிறுவனமும், காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டிய நிலையில், புச் தம்பதியர்இந்த விளக்க அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.
லோக்பாலிடம் மஹுவா புகார்
'செபி' தலைவர் மாதவி புரி புச் மீது, லோக்பால் அமைப்பில் புகார் அளித்திருப்பதாக, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். மின்னஞ்சல் மற்றும் கடிதம் வாயிலாக அளித்துள்ள புகாரில், மாதவியின் செயல்பாடுகள், தேசநலனுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதால், விசாரணை நடத்த கேட்டுக் கொண்டுள்ளதாக, மஹுவா கூறினார்.
தன் புகாரை லோக்பால், 30 நாட்களுக்குள் அமலாக்கத் துறை, சி.பி.ஐ.,க்கு அனுப்பி, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து முதல்கட்ட விசாரணையை துவங்க வேண்டும் என, அவர் கேட்டுக்
கொண்டுள்ளார்.