ADDED : ஆக 06, 2024 07:34 AM

புதுடில்லி : எச்.எஸ்.பி.சி., வங்கி, சேவைகள் துறையைச் சேர்ந்த 400 நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, ஒவ்வொரு மாதமும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதற்கான தரவுகளை, எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா எனும் நிறுவனம் திரட்டுகிறது.
ஜூலை மாதத்துக்கான அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும் பி.எம்.ஐ., குறியீடு, கடந்த ஜூலை மாதத்தில், 60.30 புள்ளிகளாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய ஜூன் மாதத்தில் இது, 60.50 புள்ளிகளாக இருந்தது.
இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியைக் குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவைக் குறிக்கும்.
வளர்ச்சி புள்ளிகள் சற்றே குறைந்தாலும், உள்நாடு மற்றும் உலகளவில் தேவை வலுவாகவே இருந்தது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக, ஏற்றுமதி சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதையடுத்து, தேவையை பூர்த்தி செய்ய கூடுதலான பணியாளர்கள் பணிஅமர்த்தப்பட்டனர்.
மூலப்பொருட்கள் மற்றும் பணியாளர் செலவுகள், நிறுவனங்களின் செலவை மேலும் அதிகரித்தன. இதனை ஈடுகட்டும் வகையில், நிறுவனங்கள் விற்பனை விலையை அதிகரித்ததால், விற்பனை விலை பணவீக்கம் கடந்த ஏழு ஆண்டுகளில் இரண்டாவது உச்சத்தை எட்டியது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.