ADDED : ஏப் 11, 2024 09:28 PM
புதுடில்லி: மியூச்சுவல் பண்டுகளில் சீரான முறையில் முதலீடு செய்ய வழிவகுக்கும் எஸ்.ஐ.பி., முறையில், கடந்த மார்ச் மாதத்தில் சாதனை உச்சமாக 19,271 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக, இப்பிரிவில் முதலீடு 19,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதற்கு முந்தைய பிப்ரவரி மாதத்தில் முதல் முறையாக எஸ்.ஐ.பி., முதலீடு, 19,187 கோடி ரூபாயை எட்டியது.
இந்நிலையில், நடப்பாண்டு இறுதிக்குள், ஒரே மாதத்தில் 25,000 கோடி ரூபாய் முதலீடு என்ற மைல்கல்லை எஸ்.ஐ.பி., எட்டும் என்று பங்கு சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் தெரிவித்ததாவது:
வழக்கமாக 'மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப்' நிறுவன பங்குகளிலேயே அதிகளவு எஸ்.ஐ.பி., முதலீடுகள் மேற்கொள்ளப்படும்.
எனினும், அதிக வருவாய் ஈட்டித் தரும் என்ற நம்பிக்கையின் காரணமாக, முதலீட்டாளர்கள் கடந்த மாதம் ஸ்மால் கேப் நிறுவனங்களில் அதிகளவு முதலீடு செய்தனர்.
ஸ்மால் கேப் நிறுவனங்களில் உள்ள ரிஸ்க்குகளை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள், தங்களது முதலீடுகளை பல்வகைப்படுத்துவது நல்லது. முதலீடு செய்யும்போது முதலீட்டின் நீண்ட கால ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது அவசியமாகும்.
இவ்வாறு தெரிவித்தனர்.

