சுற்றுலா தலங்களில் முதலீட்டை ஈர்க்க சிப்காட் நிறுவனத்தின் புதிய திட்டம்
சுற்றுலா தலங்களில் முதலீட்டை ஈர்க்க சிப்காட் நிறுவனத்தின் புதிய திட்டம்
ADDED : மார் 05, 2025 11:43 PM

சென்னை:தமிழக சுற்றுலா தலங்களில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அங்கு உள்கட்டமைப்பு பணிகளை 'சிப்காட்' நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் ஆலைகளை அமைக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் பூங்காக்களை, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைத்து வருகிறது. இதனால், அந்த பூங்காக்களில் நிறுவனங்கள் தொழில் துவங்கி வருகின்றன.
இதேபோல், தமிழகத்தில் உகந்த சுற்றுலா தலங்களை தேர்வு செய்து, அங்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, அதன் வாயிலாக முதலீட்டை ஈர்க்க, சிப்காட் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொழில்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இடையிலான தொடர்பால், சிப்காட் நிபுணத்துவத்துடன் திகழ்கிறது.
இந்த அனுபவத்தை பயன்படுத்தி, உகந்த சுற்றுலா தலங்களை தேர்வு செய்து, அங்கு தனியார் பங்களிப்புடன் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். எனவே, சுற்றுலாவுக்கு வாய்ப்பு உள்ள இடங்களை தேர்வு செய்து, அங்கு மேற்கொள்ள விரும்பும் தொழில் திட்டங்களை, முதலீட்டாளர்கள் சிப்காட் நிறுவனத்திடம் தெரிவிக்கலாம்.
அத்திட்டங்களை பரிசீலித்து, தனியார் - அரசு பங்கேற்பு முறையில் தொழில் துவங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.