ADDED : ஜூன் 04, 2024 06:56 AM

புதுடில்லி : நாட்டின் இரு சக்கர வாகன விற்பனை கடந்த மாதம் லேசான சரிவை கண்டது.
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களான 'ஹீரோ, பஜாஜ், ராயல் என்பீல்டு' ஆகியவற்றின் விற்பனை, கடந்த மே மாதத்தில் சரிந்துள்ளது.
ஹீரோ நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனை, கடந்தாண்டு மே மாதத்தில் 30,138 ஆக இருந்தது. இது, கடந்த மாதம் 26,937 ஆக குறைந்துள்ளது. இந்நிறுவனத்தின் பைக் விற்பனையும், கடந்தாண்டு மே மாதத்தில், 4,89,336ல் இருந்து 4,71,186 ஆக குறைந்துள்ளது.
இதேபோல் பஜாஜ் மற்றும் ராயல் என்பீல்டு விற்பனையும், முறையே 1 மற்றும் 8 சதவீதம் சரிவை கண்டுள்ளன. இந்நிறுவனங்களின் உள்நாட்டு விற்பனை குறைந்து இருந்த போதிலும், ஏற்றுமதியானது அதிகரித்தது. கடந்த மாதம் கார் விற்பனையும் லேசான வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்தது.
இரு சக்கர வாகனங்களுக்கான சந்தை சூழல் மற்றும் நிறுவனங்களின் போட்டித்தன்மை காரணமாக, விற்பனை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய வாகனங்களின் அறிமுகம், வினியோகம் வலுப்படுத்துதல், ஏற்றுமதி அதிகரித்தல் போன்ற முயற்சிகள் வாயிலாக, விற்பனையை அதிகரிக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
நடப்பாண்டுக்கான சாதகமான பருவமழை கணிப்பு காரணமாக, இரு சக்கர வாகன விற்பனை வரும் மாதங்களில் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.