சிறு தொழில் கடன் 'தாய்கோ' வங்கி ஓசூரில் சிறப்பு கிளை
சிறு தொழில் கடன் 'தாய்கோ' வங்கி ஓசூரில் சிறப்பு கிளை
ADDED : ஆக 17, 2024 11:19 PM

சென்னை:சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க, தமிழக அரசின், 'தாய்கோ' வங்கி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சிறப்பு கிளையை துவக்க உள்ளது.
தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் தேயிலை, கயிறு, தையல், பொறியியல் உட்பட, 269 தொழிற்கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன.
அவை, புதிய தொழில் துவங்கவும், மூலதன செலவுக்கும், 'தாய்கோ' எனப்படும் தமிழக தொழிற்கூட்டுறவு வங்கி கடன்களை வழங்குகிறது.
தற்போது, தாய்கோ வங்கிக்கு, 47 கிளைகள் உள்ளன. இது சமீபகாலமாக, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க, அதிக முன்னுரிமை வழங்குகிறது.
தற்போது, தமிழகத்தில் வேகமாக வளரும் தொழில் துறை மையமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் உருவெடுத்துள்ளது.
அங்கு, மின்சார வாகனம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் பெரிய தொழில் நிறுவனங்களின் ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதற்கு ஏற்ப, அந்நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை வழங்கும் வகையில், பல சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
எனவே, அங்குள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காகவே, ஓசூரில் தாய்கோ வங்கி, சிறப்பு கிளையை அடுத்த வாரம் துவக்க உள்ளது.