பெரிய ஆர்டர்களுக்கு புதிய வசதி அறிமுகம் செய்தது 'சொமேட்டோ'
பெரிய ஆர்டர்களுக்கு புதிய வசதி அறிமுகம் செய்தது 'சொமேட்டோ'
ADDED : ஏப் 17, 2024 01:05 AM

புதுடில்லி: ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான 'சொமேட்டோ', பார்ட்டி கொண்டாட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு 50 நபர்கள் வரை உண்ணும் அளவுக்கு பெரிய ஆர்டர்களுக்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதுபோன்ற வசதி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து சொமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் அவரது, 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெரிய ஆர்டர் வசதி முற்றிலும் மின்சார வாகனங்கள் வாயிலாகவே டெலிவரி செய்யப்படும். முன்பு வாடிக்கையாளர்கள் ஒரு பெரிய ஆர்டர் செய்தால் அது பல டெலிவரி பார்ட்னர்களால் டெலிவரி செய்யப்படும். இது சிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்தித் தர விரும்பிய நிறுவனத்தின் விருப்பத்தை பூர்த்தி செய்யவில்லை. இதன் காரணமாக வாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மின்சார வாகனங்கள் வாயிலாக டெலிவரி செய்யப்படவுள்ள இந்த ஆர்டர்கள், பெரிய ஆர்டர்கள் மேற்கொள்ளும்போது வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை சரிசெய்யும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த மின்சார வாகனங்களில் குளிரூட்டும் பெட்டிகள் மற்றும் வெப்பநிலை கட்டுப்பாட்டுடன் கூடிய சூடான பெட்டிகள் போன்ற வசதிகளை அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

