மசாலா பொருள் மாதிரிகள் மாநிலங்கள் முழுதும் சேகரிப்பு
மசாலா பொருள் மாதிரிகள் மாநிலங்கள் முழுதும் சேகரிப்பு
ADDED : மே 02, 2024 10:33 PM

புதுடில்லி: மசாலாப் பொருட்கள் தயாரிப்பில், தர நிர்ணய விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படுகிறதா என்பதை பரிசோதிக்க, அவற்றின் மாதிரிகளை சேகரிக்குமாறு, மாநில அரசுகளை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அண்மையில் இந்தியாவின் சில மசாலாப் பொருட்களுக்கு ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகள் தடை விதித்தன. அம்மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு எனப்படும் பூச்சி கொல்லி அதிகளவில் இருப்பதாக அவை குற்றஞ்சாட்டியிருந்தன.
இதைத் தொடர்ந்து எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பல்வேறு பிராண்டுகளைச் சேர்ந்த மசாலாப் பொருட்களின் மாதிரிகளை சோதனைக்காக சேகரிக்குமாறு, மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. சேகரிக்கப்படும் மாதிரிகள், இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய விதிமுறைகளை பூர்த்தி செய்கிறதா என்ற ஆய்வுக்குட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான 'நெஸ்லே', தெற்காசிய, ஆப்ரிக்க மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளில் அதிக சர்க்கரை அளவு கொண்ட குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக சர்வதேச அமைப்பு சுட்டிக்காட்டியதையடுத்து, உணவு தரக்கட்டுப்பாளர்கள், குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களின் மாதிரிகளையும் சேகரிக்க துவங்கியுள்ளனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விதிமுறைகளின்படி எத்திலீன் ஆக்சைடு உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்படாது. மேலும், எத்திலீன் ஆக்சைடு இருப்பதாக கூறப்பட்ட மசாலா பொருட்கள் மாதிரிகளின் ஆய்வக அறிக்கையை, அந்நாடுகளிடம் இருந்து இந்தியா கோரியுள்ளது. அவை உள்நாட்டில் உள்ள நிபுணர்கள் குழுவால் ஆய்வு செய்யப்படும். இதன் ஒருங்கிணைந்த அறிக்கை இன்னும் 25 நாட்களில் வெளியாகும்.
இவ்வாறு கூறினார்.
'மசாலா பொருட்கள் குறித்த ஒருங்கிணைந்த அறிக்கை இன்னும் 25 நாட்களில் வெளியாகும்'