ஸ்பைஸ் ஜெட்டிடம் ரூ. 1,323 கோடி நஷ்ட ஈடு கோரும் கலாநிதி மாறன்
ஸ்பைஸ் ஜெட்டிடம் ரூ. 1,323 கோடி நஷ்ட ஈடு கோரும் கலாநிதி மாறன்
ADDED : மே 28, 2024 06:48 AM

புதுடில்லி : 'கல் ஏர்வேஸ்' நிறுவனர் கலாநிதி மாறன் தரப்பிலிருந்து, 'ஸ்பைஸ்ஜெட்' விமான நிறுவனத்திடம் 1,323 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கும் கலாநிதி மாறனுக்கும் இடையேயான இந்த வழக்கில், கடந்த 17ம் தேதி டில்லி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடும் செய்யப்பட்டு உள்ளது.
நிதி நெருக்கடியால் தத்தளித்து வந்த 'ஸ்பைஸ்ஜெட்' விமான நிறுவனத்தில், தனக்கு இருந்த முழு பங்கையும், கலாநிதி மாறன் கடந்த 2015ம் ஆண்டு, அஜய் சிங்கிற்கு விற்று வெளியேறினார். முன்னுரிமை பங்குகள் வெளியிடுவதற்காக, கலாநிதி மாறன் 679 கோடி ரூபாய் வழங்கி உள்ளார்.
இந்நிலையில், முன்னுரிமை பங்குகளை வெளியிடவும் இல்லை; கொடுத்த பணத்தை திருப்பித் தரவும் இல்லை என்று கூறி, கடந்த 2017ம் ஆண்டு, டில்லி உயர் நீதிமன்றத்தை நாடினார், கலாநிதி மாறன்.
இதையடுத்து, கடந்த 7 ஆண்டுகளில் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
இறுதியாக கடந்த ஜூலை மாதம், டில்லி உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வு, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், கலாநிதி மாறன் மற்றும் கல் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு 270 கோடி ரூபாயோடு வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இதை எதிர்த்து மேல்முறையீட்டு மனு ஒன்றை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தாக்கல் செய்திருந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு, வழக்கில் பல்வேறு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும், மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரிக்கக் கோரியும், கடந்த 17ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து, ஏற்கனவே வழங்கிய 730 கோடி ரூபாயில் 450 கோடி ரூபாயை திருப்பிக் கேட்க உள்ளதாக, ஸ்பைஸ்ஜெட் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கலாநிதி மாறன் தரப்பில் மேல்முறயீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கினால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு கட்ட, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மற்றும் அதன் தலைவர் அஜய் சிங்கிடம், 1,323 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.