'உணவு கழகத்திடமிருந்து நேரடியாக மாநிலங்கள் அரிசியை வாங்கலாம்'
'உணவு கழகத்திடமிருந்து நேரடியாக மாநிலங்கள் அரிசியை வாங்கலாம்'
UPDATED : ஆக 04, 2024 10:29 AM
ADDED : ஆக 04, 2024 02:00 AM

புதுடில்லி : மாநிலங்கள் தங்கள் நலத்திட்ட உதவிகளுக்கு தேவைப்படும் அரிசியை, இந்திய உணவு கழகத்திடம் இருந்து நேரடியாக வாங்கிக் கொள்ளலாம் என, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், உற்பத்தி குறைவாக இருக்கும் என்ற அச்சத்தின் காரணமாக, வெளிச் சந்தை விற்பனையை மத்திய அரசு நிறுத்தியது.
இதையடுத்து, இத்திட்டத்தின் கீழ், மத்திய தொகுப்பில் இருந்து அரிசி மற்றும் கோதுமையை மாநில அரசுகளுக்கு விற்பனை செய்வது, கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் நிறுத்தப்பட்டது.
கர்நாடக அரசு, தன் மாநில நலத்திட்ட உதவிகளுக்காக கடந்தாண்டு அரிசி கோரிய போது, மத்திய அரசு அதை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருப்பதாவது:
வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், மாநில அரசுகள் தங்கள் மாநில நலத்திட்ட உதவிகளுக்கு தேவைப்படும் அரிசியை, குவின்டால் ஒன்றுக்கு 2,800 ரூபாய் என்ற விலையில், மத்திய தொகுப்பில் இருந்து, இந்திய உணவு கழகத்திடம் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். மின்னணு ஏலத்தில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை.
கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய இருந்த 'பாரத்' பிராண்டு ஆட்டா, அரிசி ஆகியவை விற்பனை, மறு அறிவிப்பு வரும் வரை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.