சீனாவிலிருந்து உருக்கு இறக்குமதி நடப்பாண்டில் 66 சதவீதம் அதிகரிப்பு
சீனாவிலிருந்து உருக்கு இறக்குமதி நடப்பாண்டில் 66 சதவீதம் அதிகரிப்பு
ADDED : செப் 12, 2024 12:09 AM

புதுடில்லி:நடப்பாண்டு ஜூலை மாதம் வரையிலான முதல் ஏழு மாதங்களில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கின் அளவு 66.70 சதவீதம் அதிகரித்து, 15 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இது கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் 9 லட்சம் டன்னாக இருந்தது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உருக்கின் மதிப்பு அதிகரித்து காணப்பட்டதால், கடந்த நிதியாண்டில் இந்தியா நிகர உருக்கு இறக்குமதியாளரானது. குறிப்பாக, சீனா மற்றும் ஜப்பான் நாடுகளிலிருந்து அதிகளவிலான உருக்கு இறக்குமதி செய்யப்பட்டது.
இதையடுத்து, விற்பனை சரிந்ததால், மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உருக்கின் விலை சரிந்தது.
இதையடுத்து, உருக்கு தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பல பெரிய நிறுவனங்களும், இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இது ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மட்டும், இப்பிரிவில் இயங்கி வரும் 35 சதவீத சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தங்களது வணிகத்தை மூடியுள்ளன.
உள்நாட்டில் உருக்கு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மின்சார வரி, இரும்புத்தாது வரி, நிலக்கரி வரி ஆகிய பல வரிகளை செலுத்த வேண்டியுள்ளதால், அவர்களின் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது. அதேசமயம், மற்ற நாடுகளில் இதேபோன்ற வரிகள் இல்லாததால், இறக்குமதி செய்யப்படும் உருக்கு குறைந்த விலையில் கிடைக்கிறது.
இதையடுத்து, உள்நாட்டு உற்பத்தியாளர்களின் நலன்களைப் பாதுகாக்க, பி.ஏ.டி., எனும் எல்லை சரிசெய்தல் வரியை அமல்படுத்தலாம் என்ற பரிந்துரையை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் சமீபத்தில் வழங்கினார்.
மத்திய உருக்குத் துறை அமைச்சர் குமாரசாமி, உருக்குக்கான இறக்குமதி வரியை 7.50 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்துவது குறித்து நிதி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்திருந்தார். எனினும், தற்போது வரை குறிப்பிடத்தக்க வகையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு ஜூலை முதல்
செப்டம்பர் வரையிலான காலத்தில், உருக்குத் துறை சார்ந்த 35 சதவீத சிறு, குறு நிறுவனங்கள், தங்களது வணிகத்தை மூடியுள்ளன