சிறுதொழில் துறை வலிமை பெற மத்திய அரசு முன்னுரிமை: மோடி
சிறுதொழில் துறை வலிமை பெற மத்திய அரசு முன்னுரிமை: மோடி
ADDED : மார் 05, 2025 12:54 AM

புதுடில்லி:நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை வலிமைப்படுத்த உறுதி கொண்டிருப்பதாக, பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் மீதான இணைய வழி கலந்துரையாடலில் பங்கேற்ற பிரதமர் கூறியதாவது:
இந்திய உற்பத்தி மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு எம்.எஸ்.எம்.இ., துறை முதுகெலும்பாக உள்ளது. எனவே, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான இத்துறையை வலிமைப்படுத்தவும் ஆதரவளிக்கவும் அரசு உறுதி கொண்டுள்ளது.
ஒரு சில துறைகளை ஊக்குவிக்க, தொழில் துறை நிபுணர்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி, மத்திய அரசு ஊக்கம் அளிக்கிறது. சிறுதொழில் துறை, அரசின் முக்கிய கவனத்தில் உள்ளது.
அதன் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தொழில் செய்ய எளிதான சூழல், முறைப்படுத்தல், முதலீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்க, பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 14 ஆண்டுகளுக்குப் பிறகு, 2020ல், எம்.எஸ்.எம்.இ., துறைக்கான வரையறை மறுசீரமைக்கப்பட்டது.
தங்கள் தொழில் வளர்ச்சி கண்டால், அரசின் பலன்கள், சலுகைகள் கிடைக்காது என்று அதுவரை கருதிய சிறுதொழில் உரிமையாளர்களின் அச்சம் நீக்கப்பட்டது.
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டி வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், கோடிக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
கடன் பெறுவதில் சிறுதொழில் துறை சந்தித்து வந்த சிரமங்களை அரசு களைந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் எம்.எஸ்.எம்.இ.,க்கள் கிட்டத்தட்ட 12 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றிருந்த நிலையில், தற்போது 30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
சிறுதொழில் கடனுக்கான உத்தரவாத நிதியை இரட்டிப்பாக்க, 20 லட்சம் கோடியாக அரசு நிர்ணயித்துள்ளது.
எம்.எஸ்.எம்.இ.,க்களுக்கு கிரெடிட் கார்டு வாயிலாக 5 லட்சம் ரூபாய் வரை தங்கள் நடைமுறை செலவுகளை மேற்கொள்ள கடன் அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.