ADDED : ஆக 19, 2024 01:01 AM

-ஸ்ரீபெரும்புதுார்:தைவானைச் சேர்ந்த மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனமான 'பாக்ஸ்கான்', இந்தியாவில் 'பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்' எனப்படும் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புக்கான ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் யங் லியு தெரிவித்துஉள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
இந்தியாவில் தற்போதுதான் பாக்ஸ்கானின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பிரிவு துவங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் ஆலை அமைப்பது குறித்து, இங்குள்ள தொழில்துறை அமைச்சருடன் பேசி வருகிறோம்.
மின்சார வாகன பயன்பாட்டை கருத்தில் கொண்டு, பாக்ஸ்கான் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் வணிகத்தில் அதிக கவனம் செலுத்துகிறது.
இந்த ஆலை சூரிய சக்தி, காற்று போன்ற புதுப்பிக்கத் தக்க மூலங்களில் இருந்து ஆற்றல் சேமிப்பை மேற்கொள்ளும் வகையில் செயல் படுத்தப்படும். இந்தியாவிலும் மின்சார வாகன ஆலை அமைக்க பாக்ஸ்கான் முன் வந்துள்ளது. இது மிக விரைவில் துவங்கும்.
இவ்வாறு தெரிவித்தார்.
மின் வாகன பிரிவை கருத்தில் கொண்டு, பாக்ஸ்கான் தனது பேட்டரி உற்பத்தி வணிகத்தை விரிவுபடுத்தி வருகிறது. இதன் முதல் ஆலை ஏற்கனவே தைவானில் அமைக்கப்பட்டுள்ளது.