மத்திய அரசின் பழுதில்லா உற்பத்தி சான்று பெறுவதில் தமிழக நிறுவனங்கள் ஆர்வம்
மத்திய அரசின் பழுதில்லா உற்பத்தி சான்று பெறுவதில் தமிழக நிறுவனங்கள் ஆர்வம்
ADDED : செப் 10, 2024 11:17 PM

சென்னை:மத்திய அரசின் நிலையான 'பழுதில்லா உற்பத்தி, விளைவில்லா உற்பத்தி' சான்றை பெறுவதில், தமிழக நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
தொழில் நிறுவனங்களுக்கு அவற்றின் தயாரிப்புகளின் நம்பகத்தன்மை, நீடித்த உழைப்பு, செயல் திறனை மேம்படுத்த, தர மேலாண்மை உதவுகிறது. தரமான பொருட்களை உருவாக்குவதற்கு, சர்வதேச அளவில் ஐ.எஸ்.ஓ., உட்பட பல்வேறு தரச்சான்றுகள் வழங்கப்படுகின்றன.
நம் நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தற்போது உலகளாவிய போட்டியை எதிர்கொண்டு வருகின்றன. இதற்கு உதவும் வகையில் மத்திய அரசு, 'செட்' அதாவது, 'ஜீரோ டிபெக்ட் ஜீரோ எபெக்ட்' எனப்படும் நிலையான பழுதில்லா உற்பத்தி, விளைவில்லா உற்பத்தி சான்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்திஉள்ளது.
இத்திட்டம், தொழில் நிறுவனங்களுக்கு பழுதில்லா உற்பத்தி, விளைவில்லா உற்பத்தி நடைமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, சிறந்த நிறுவனமாக செயல்பட உதவுகிறது.
இந்த பழுதில்லா உற்பத்தி சான்றை பெறுவதில், தமிழக நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதுவரை, தமிழகத்தை சேர்ந்த, 5,500 நிறுவனங்கள் இந்த சான்றை பெற்றுள்ளன.
l சான்று பெறும் நிறுவனங்களுக்கு, கூடுதல் மானியம், அதிக கடன் உட்பட பல்வேறு சலுகைகள் கிடைக்கும்
l மத்திய அரசின், 'உத்யம்' தளத்தில் பதிவு செய்த அனைத்து நிறுவனங்களும், சான்றுக்கு விண்ணப்பிக்க முடியும்.
l இந்த சான்று, வெண்கலம், வெள்ளி, தங்கம் ஆகிய மூன்று பிரிவுகளில், தரம், பாதுகாப்பு, உற்பத்தி, துாய்மை, ஆற்றல், சுற்றுச்சூழல் உட்பட பல்வேறு அளவுகோளில் மதிப்பிடப்பட்டு வழங்கப்படுகிறது.
l நிறுவனங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும்.