ADDED : ஜூலை 04, 2024 11:51 PM

சென்னை:“இந்தியாவின் அறிவு தலைநகரகமாக தமிழகம் திகழ்கிறது,” என, தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.
மருத்துவ துறையில் ஈடுபட்டு வரும் 'அஸ்ட்ரா ஜெனிகா' நிறுவனம், சென்னை தரமணி, ராமானுஜம் தகவல் தொழில்நுட்ப நகரத்தில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், உலகளாவிய புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப மையம் அமைத்துள்ளது. இதை, அமைச்சர் ராஜா நேற்று துவக்கி வைத்தார்.
விழாவில் ராஜா பேசியதாவது:
அஸ்ட்ரா ஜெனிகாவின் உலகளாவிய மைய திறப்பு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. இந்த மையம், சென்னையில், 4,000 உயர்தர வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய இடமாக இருக்கும்.
தமிழகத்தில் மீண்டும் முதலீடு செய்து வளர வேண்டும் என்ற அந்நிறுவனத்தின் முடிவு, தமிழக மக்களின் திறமைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.
இந்தியாவின் அறிவுத் தலைநகரமாக தமிழகம் திகழ்கிறது. முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையின் கீழ் உலகளாவிய, புதுமை மற்றும் வளர்ச்சியை ஈர்க்கும் தன்மையை தொடர்ந்து உருவாக்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.