ADDED : ஏப் 18, 2024 11:49 PM

சென்னை: ''கடந்த நிதியாண்டில் தமிழகம், 79,348 கோடி ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்து, முதலிடத்தை பிடித்துள்ளது,'' என, தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர், 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட விபரம்: கடந்த, 2023 - 24ம் நிதியாண்டில், தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி, 9.56 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, 79,348 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, ஒட்டுமொத்த இந்தியாவின் எலட்ரானிக்ஸ் ஏற்றுமதியில், 32.84 சதவீதம். முந்தைய நிதியாண்டிலும், 44,571 கோடி ரூபாய் ஏற்றுமதியுடன் தமிழகம் முதலிடத்தில் இருந்தது.
சில மாதங்களுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதி இலக்கான, 74,700 கோடி ரூபாய் எட்டப்பட்டது. முழு நிதியாண்டில், அதை விட அதிக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையின் கீழ் தமிழகம், முதலீடுகள் மற்றும் உயர்தர வேலைவாய்ப்புடன் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி, 2.41 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து, கர்நாடகா மாநிலம், 38,180 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும்; உ.பி., 36,520 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மஹாராஷ்டிரா, 25,647 கோடி ரூபாயுடன் நான்காவது இடத்திலும்; குஜராத், 22,825 ரூபாயுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

