தமிழகத்தின் கனிம ஆய்வு திட்டங்கள் அனுமதி வழங்கியது மத்திய அரசு
தமிழகத்தின் கனிம ஆய்வு திட்டங்கள் அனுமதி வழங்கியது மத்திய அரசு
ADDED : ஜூன் 23, 2024 12:55 AM

சென்னை:தங்கம் மற்றும் அரிய வகை தனிமங்களுக்கான, தமிழகத்தின் கனிம ஆய்வு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கனிம வருவாய் அதிகரித்து வருவதால், புதிய ஆய்வு திட்டங்களை துவங்க, மாநில அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, மத்திய அரசின் இந்திய புவியியல் ஆய்வு மையம், கனிம ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம், குத்ரேமுக் இரும்பு தாது கார்ப்பரேஷன் போன்ற ஆய்வு நிறுவனங்களை பயன்படுத்தி, புதிய கனிமங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
சமீபத்தில் இந்நிறுவனங்கள் கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தங்கம், கிராபைட் மற்றும் அரிய வகை தனிமங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள விண்ணப்பித்திருந்தன. இவற்றுக்கு, மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
இது மட்டுமல்லாமல், அரியலுார் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 10 சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் கண்டறியப்பட்டு, குத்தகைக்கு விடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விரைவில் இதற்கான ஆன்லைன் ஏலமும் நடைபெற உள்ளதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.