'தொலைத்தொடர்பு கட்டணங்கள் தேர்தலுக்கு பின் 17 சதவீதம் உயரும்'
'தொலைத்தொடர்பு கட்டணங்கள் தேர்தலுக்கு பின் 17 சதவீதம் உயரும்'
ADDED : ஏப் 11, 2024 09:47 PM

புதுடில்லி: பார்லிமென்ட் தேர்தலுக்குப் பின், தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் தங்கள் சந்தா கட்டணத்தை, 15 முதல் 17 சதவீதம் வரை உயர்த்தும் என எதிர்பார்பதாக, 'ஆன்டிக் ஸ்டாக் புரோக்கிங்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் பார்லி., தேர்தல், வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை, ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கு பின், தொலைத்தொடர்பு துறையில், கட்டணம் 15 முதல் 17 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இத்துறையில், 2021 டிசம்பரில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.
தற்போது இந்த கட்டண உயர்வால் அதிக பயனடைய உள்ளது, 'ஏர்டெல்' நிறுவனம் தான். அதன்படி, நிறுவனத்தின் தனிநபர் வாயிலான சராசரி வருவாய், தற்போதுள்ள 208 ரூபாயில் இருந்து, 286 ரூபாயாக 2027ம் நிதியாண்டுக்குள் உயரும்.
கட்டண உயர்வு, 2ஜி பயனர்கள் 4ஜிக்கு மாறுவது, குறையும் மூலதன செலவுகள் போன்ற காரணங்களால், ஏர்டெல் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சிறப்பான நிதி வளர்ச்சியை காண உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களாக உள்ள 'ஜியோ' மற்றும் ஏர்டெல், கடந்த ஐந்தரை ஆண்டுகளாக தொடர்ந்து பயனர்களை அதிகரித்துள்ளனர். அதேசமயம், பி.எஸ்.என்.எல்., மற்றும் 'வோடபோன் ஐடியா' நிறுவனங்களின் பயனர் அளவு சரிந்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

