நாட்டின் சரக்கு ஏற்றுமதி ஏப்ரலில் சற்றே அதிகரிப்பு
நாட்டின் சரக்கு ஏற்றுமதி ஏப்ரலில் சற்றே அதிகரிப்பு
ADDED : மே 16, 2024 01:19 AM

புதுடில்லி:நாட்டின் சரக்கு ஏற்றுமதி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.07 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 2.90 லட்சம் கோடி ரூபாயை எட்டியதாக, மத்திய வர்த்தகத்துறை செயலர் சுனில் பர்த்வால் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்திலேயே சரக்கு ஏற்றுமதி அதிகரித்திருப்பது, இனி வரும் மாதங்களுக்கான நல்ல முன்னோட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஏப்ரலில், நாட்டின் சரக்கு ஏற்றுமதி 1.07 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதியும் 10.25 சதவீதம் அதிகரித்து 4.49 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இதையடுத்து, வர்த்தக பற்றாக்குறை 32.30 சதவீதம் உயர்ந்து, 1.59 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு ஏப்ரலில் 8,400 கோடி ரூபாயாக இருந்த தங்க இறக்குமதி, கடந்த மாதம் மும்மடங்கு அதிகரித்து, 25,800 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த மார்ச்சில் தங்க இறக்குமதி 12,700 கோடி ரூபாயாக இருந்தது.
இந்நிலையில், கடந்த நிதியாண்டுக்கான நாட்டின் சரக்கு மற்றும் சேவைகள் துறையின் ஒட்டு மொத்த ஏற்றுமதிகளுக்கான மதிப்பீட்டையும், 64.47 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 64.59 லட்சம் கோடி ரூபாயாக அமைச்சகம் உயர்த்தி அறிவித்துள்ளது.
சேவைகள் துறையின் ஏற்றுமதி மதிப்பீடு அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.