மதுரையில் 'டைடல் பார்க்' கட்ட 'டெண்டர்' கோரியது தமிழக அரசு
மதுரையில் 'டைடல் பார்க்' கட்ட 'டெண்டர்' கோரியது தமிழக அரசு
ADDED : ஆக 08, 2024 01:00 AM

சென்னை:மதுரையில், 245 கோடி ரூபாய் திட்ட செலவில், 'டைடல் பார்க்' கட்டடம் கட்டுவதற்கு, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.
மாநிலம் முழுதும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்க, 'டைடல் பார்க்' நிறுவனம், டைடல் பார்க் கட்டடங்களை கட்டி வருகிறது.
அதன்படி, மதுரையில் மாட்டுத்தாவணி அருகில், 5.60 ஏக்கரில் தரைதளத்துடன், 12 தளங்கள் கொண்ட டைடல் பார்க் கட்டப்பட உள்ளது.
இதன் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. திட்ட செலவு, 245 கோடி ரூபாய்.
இங்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களுக்கு தொழில்கள் துவங்க இடங்கள் ஒதுக்கப்படும்.
மாடித்தோட்டம், குழந்தைகள் பாதுகாப்பு மையம், ஓய்விடம், உணவுக்கூடம் உள்ளிட்டவை இங்கு இடம்பெறும். இதனால், 1,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
சென்னை, கோவையில் டைடல் பார்க் செயல்படுகிறது.
விழுப்புரத்தில், 'மினி டைடல் பார்க்' கட்டப்பட்ட நிலையில், சேலம், தஞ்சை, சென்னை பட்டாபிராமில் கட்டுமானம் முடிவடையும் தருவாயில் உள்ளது. துாத்துக்குடி, வேலுாரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
மதுரை 'ஸ்டார்ட் அப்' திருவிழாபங்கேற்க பதிவு துவங்கியது
மதுரையில் செப்., 28, 29ல் நடைபெற உள்ள ஸ்டார்ட் அப் திருவிழாவுக்கான பதிவு நேற்று முன்தினம் முதல் துவங்கி உள்ளது.
தமிழகத்தில் 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் துவக்குவதை ஊக்கு விக்கும் வகையில், 'ஸ்டார்ட் அப்' டி.என்., நிறுவனம், ஆண்டுதோறும், 'ஸ்டார்ட் அப்' திருவிழாவை நடத்துகிறது.
புத்தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர் என, அனைத்து தரப்பினரும், ஒரே தளத்தில் ஒன்றிணைந்து, தங்களுக்குள் கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பாக, இந்த திருவிழா அமையும்.
அதன்படி, இந்தாண்டுக்கான ஸ்டார்ட் அப் திருவிழா, மதுரை தமுக்கம் அரங்கில் வரும் செப்., 28, 29ல் நடக்கிறது. இதில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தயாரிப்பை காட்சிப்படுத்தும் அரங்கு அமைப்பதற்கான பதிவு, ஸ்டார்ட் அப் தளத்தில் நேற்று முன்தினம் முதல் துவங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில், 40 வல்லுனர்கள் தொழில்வாய்ப்பு குறித்து ஆலோசனைகளை வழங்க உள்ளனர். மேலும், 10,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.