ADDED : ஏப் 02, 2024 10:58 PM

திருப்பூர்:நடப்பு பருத்தி சீசனில், கடந்த ஆறு மாதங்களில், 248 லட்சம் பேல் பஞ்சு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வரத்து சீராக இருப்பதாலும்; பஞ்சுக்கான தேவை அதிகரிக்காததாலும், பெரியளவில் தட்டுப்பாடு ஏற்படவில்லை என, நுாற்பாலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பருத்திக்கழகம், நடப்பு பருத்தி சீசனில், 316 லட்சம் பேல் அளவுக்கு, பஞ்சு மகசூல் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தது.
ஒரு பேல் என்பது 170 கிலோ. இதுவரை இல்லாத அளவுக்கு, ஜன., மாதம் 50 லட்சம் பேல்கள் விற்பனைக்கு வந்தது. தற்போதைய நிலவரப்படி, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அதிக பஞ்சு விற்பனைக்கு வருகிறது.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், கர்நாடகா பஞ்சு வரத்து குறைந்துவிட்டது; இருப்பினும், வரத்து சீராக இருக்கிறது.
இந்திய பருத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 31 வரை, மொத்தம் 248 லட்சம் பேல் பஞ்சு விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுாற்பாலைகள், பஞ்சு வாங்கி இருப்பு வைக்கும் நிலையில் இல்லை; வாராந்திர தேவைக்கு மட்டும் கொள்முதல் செய்கின்றன.
பஞ்சு வர்த்தக நிறுவனங்கள் வாங்கி இருப்பு வைத்துள்ளன.
வரத்து குறைந்த நிலையில், கடந்த மாதம் பஞ்சு விலை திடீரென உயர்ந்தது. தற்போது, 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி 60,000 முதல் 62,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதுகுறித்து, டாஸ்மா எனும் 'தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன்' தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:
நுாற்பாலைக்கு பஞ்சு வந்து சேரும்போது, கொள்முதல் விலையில் இருந்து, கேண்டிக்கு, 3,000 ரூபாய் விலை உயர்கிறது. முதற்கட்ட பருத்தி பறிப்பு முடிந்துள்ளது.
இதுதவிர, இன்னும் மூன்று கட்ட பருத்தி பறிப்பு நடக்கும். தினமும், 60,000 பேல் விற்பனைக்கு வருகிறது.
இருப்பினும், பஞ்சு வரத்து சீராக இருப்பதாலும், நுாற்பாலைகளின் தேவை அதிகரிக்காததாலும், பெரிய தட்டுப்பாடு ஏற்படவில்லை; பஞ்சு விலை அதிகபட்சமாக உயர வாய்ப்பு இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

