ஆயிரம் சந்தேகங்கள் :வரிவிதிப்பு முறையில் பழசு, புதிது எது நல்லது?
ஆயிரம் சந்தேகங்கள் :வரிவிதிப்பு முறையில் பழசு, புதிது எது நல்லது?
UPDATED : மே 27, 2024 12:46 AM
ADDED : மே 27, 2024 12:45 AM

வங்கி சேமிப்பு கணக்கோடு இணைக்கப்பட்டுள்ள என் மொபைல்போன் எண்ணை, இணையம் வழியாக மாற்ற முடியவில்லை. இ - மெயில் அனுப்பியும் மாற்றித் தர மாட்டேன் என்கின்றனர். என்ன செய்வது?
எஸ்.மாலினி, கும்பகோணம்
மொபைல்போன் எண் மற்றும் இ - மெயில் ஐ.டி., விபரம் வெளியே கசிவது தான் பெரும்பாலான இணைய மோசடிகளுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. அதனால், சேமிப்புக் கணக்கோடு இணைந்துள்ள இவ்விரு அம்சங்களையும் மாற்ற வேண்டும் என்றால், 'ஹோம் பிராஞ்சு' என்று சொல்லப்படும், கணக்கு இருக்கும் தாய் கிளைக்கு நேரடியாக சென்று கோரிக்கை வைத்தால் தான், பெரும்பாலான பொதுத் துறை வங்கிகள் மாற்றித் தருகின்றன.
வாடிக்கையாளரது பாதுகாப்புக்காக வங்கிகள் எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டத்தக்கது தான். ஆனால், பல சமயங்களில் நடைமுறை சாத்தியமில்லாமல் இருக்கிறது. கணக்குத் துவங்கிய காலத்தில் ஒரு பகுதியில் வசித்தவர்கள், அதன்பின் வெளிநாடுகளுக்கு சென்று இருக்கக்கூடும். அவர்களுடைய மொபைல் எண் செயலற்றுப் போயிருக்கலாம்.
மொபைல் எண்ணையும், இ - மெயில் ஐ.டி.,யையும் மாற்றித் தருவதற்கு, வேறு ஏதேனும் பாதுகாப்பான வழிகளை வங்கிகள் கண்டுபிடிக்க வேண்டும்.
எனக்கு கடந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி அன்று 80 வயது பூர்த்தி ஆனது. 2023- - 24ம் ஆண்டுக்கான வருமானத்தில், சூப்பர் சீனியர் சிட்டிசனுக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பான 5 லட்சம் ரூபாய் சலுகை எனக்கு கிடைக்குமா?
ஆர்.வெங்கடசுப்பராம், சிவகங்கை
தாராளமாக கிடைக்கும். குறிப்பிட்ட நிதியாண்டில், எப்போது ஒருவர் 80 வயதை எட்டினாலும், அவர் சூப்பர் சீனியர் சிட்டிசன் என்றே கருதப்படுவார். அந்த ஆண்டுக்கான வருமான வரியை, அடுத்த நிதியாண்டின் துவக்கத்தில் செலுத்தும்போது, 5 லட்ச ரூபாய் வரை அவருக்கு வரிவிலக்கு உண்டு.
நான் என் வீட்டை டியூஷன் சென்டருக்கு வாடகைக்கு விட்டால், ஏதேனும் எதிர் விளைவு ஏற்படுமா? வீட்டு வரி மற்றும் மின்சாரத்தை, வர்த்தக கட்டணத்துக்கு உயர்த்தி விடுவரா?
எஸ்.ஜெயச்சந்திரன், சென்னை
அடிப்படையில் ஒரு வீடு எதற்காக பயன்படுகிறது என்பதை மாநகராட்சி பார்க்கும். வீட்டின் சொந்தக்காரர்களே வசிக்கின்றனரா, அல்லது அது ஏதேனும் வர்த்தக நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகிறதா என்பது பார்க்கப்படும். அதற்கு ஏற்ப வீட்டின் 'மாதாந்திர வாடகை மதிப்பு' நிர்ணயம் செய்யப்பட்டு, வீட்டு வரி கணிக்கப்படும்.
டியூஷன் சென்டர் என்பது வர்த்தக நடவடிக்கையாக நீதிமன்றத்தால் பார்க்கப்படவில்லை. ஆனால், மாநகராட்சி வரிவிதிப்பு அலுவலர்கள் எப்படி இதை கணிக்கின்றனர் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை.
ஆனால், வேறுசில பிரச்னைகளும் உண்டாகலாம். நம்ம ஊர்க்காரர்கள் தானும் வாழமாட்டார்கள், அடுத்தவர்கள் வாழ்ந்தாலும், அதை ரசிக்க மாட்டார்கள். உங்கள் வீட்டைச் சுற்றி டியூஷன் சென்டர் பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். முகம் தெரியாத மாணவர்கள் வந்துபோவது, பாதுகாப்பு குறைபாடாக கருதப்படலாம்.
வீட்டு வாசலில் ஏராளமான சைக்கிள்களோ, பைக்குகளோ நிறுத்தப்படுமானால், மாணவர்களால் இரைச்சல் அதிகமாக இருக்குமானால், அக்கம்பக்கத்துக்கு வீட்டுக்காரர்களுக்கு அது பெரும் தொல்லையாக மாறலாம். அடுக்ககத்தில் டியூஷன் சென்டர் இருக்குமானால், லிப்டு பயன்பாடு அதிகமாக இருக்கும். அதனை சொசைட்டி கேள்வி கேட்கலாம்.
நான் தனியார் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி, தவணை கட்டி வருகிறேன். கடந்த மாதம் அவர்களாகவே அழைத்து, கடனுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளதாகவும்; அதற்காக பிராசஸிங் பீஸ் கட்டச் சொன்னார்கள். அதன்படி கட்டி, வட்டி விகிதமும் 9 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதமாக குறைத்துக்கொண்டேன். இந்த வட்டி குறைப்பால் தவணை தொகை கட்டும் தொகையின் அளவை குறைத்துக் கொள்வதை விட, கட்டும் காலவரம்பு அதாவது மாதங்களை குறைத்துக் கொள்ளலாம் என்று பேங்கில் கூறினர். இதில் எது நல்லது?
இரா.ஷண்முகசுந்தரம், திருப்பூர்
இது உங்கள் பணவசதியைப் பொறுத்த முடிவு. ஒருவேளை உங்களுக்கு மாதந்தோறும் கட்டும் இ.எம்.ஐ., தொகை அதிகமாக தோன்றினால், அதைக் குறைத்துக் கொள்ளலாம். இங்கே காலம் குறையாது. ஆனால், காலத்தைக் குறைத்துக் கொள்வது தான் சிறப்பான வழிமுறை. ஒன்று, கடன் சீக்கிரம் முடிந்து தொலையும்.
வேறு கடன்கள் ஏதேனும் வாங்க நேருமானால், அப்போது கடன் சுமை குறைவாக இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட கடன் வைத்திருந்தீர்கள் என்றால், துாக்கம் மட்டும் போகாது, மண்டையில் உள்ள கேசமும் காணாமல் போகும், நரை, திரை, மூப்பு சீக்கிரம் எட்டிப் பார்க்கும். கடனுக்கும் சீக்கிரம் நரைப்பதற்கும் தொடர்பு இருப்பதாக, சமீபத்தில் கூட வாட்ஸாப் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
பழைய வரி விதிப்பு முறையானது, சேமிக்கும் பழக்கத்தையும் ஊக்குவித்து; வரிச்சலுகையும் தருவதாக இருந்தது. ஆனால் புதிய வரி விதிப்பு முறை, வரி செலுத்துபவர்களுக்கு பயனுள்ளதாகத் தோன்றினாலும், வரிச்சலுகைக்காகவாவது சேமிக்கும் வழக்கத்தை ஊக்குவிப்பதாக இல்லை. இதுகுறி த்து தங்கள் பார்வை என்ன?
ஆ.கனகராஜ், காங்கயம்
நம் அரசும், அதிகாரிகளும், மக்களும் கூட பழைய சோஷலிச சிந்தாந்த மனப்பான்மையில் இருந்து வெகுதுாரம் தள்ளி வந்துவிட்டனர். பொதுமக்கள் சேமிக்கவேண்டும், அவர்களைச் சேமிக்க ஊக்கப்படுத்த வேண்டும், வரிச் சலுகைகள் தந்தால், அந்த சிந்தனையும் ஆர்வமும் மேம்படும் என்பது பழைய சிந்தனை.
என் கடமை அரசை நடத்த வேண்டும். அதற்கு நிதியாதாரம் தேவை. அதற்கு வரி வசூலிப்பது ஒரு வழிமுறை.
என்ன வருவாய் ஈட்டுகிறீர்களோ, அதற்கு உரிய வரியைக் கட்டுங்கள், உங்களுக்கு உரிய வசதிகளை செய்து தருகிறோம் என்பது நவீன கால அரசுகள் கொண்டிருக்கும் தற்போதைய சிந்தனை.
எதிர்காலத்திற்காக சேமிப்பதோ, சேமிக்காமல் இருப்பதோ என் முடிவு. அரசு ஏன் இந்த விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டும் என்பது இன்னொரு பார்வை. மக்கள் குழந்தைகள் அல்லர், அவர்களை கைபிடித்து வழிநடத்த வேண்டிய அவசியமில்லை. அவரவர் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பது தான் இதன் தொடர்ச்சி.
இந்த நவீன சிந்தனைகள் எல்லாம் எனக்கு உவப்பாகத் தான் இருக்கின்றன. ஆனால், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக கைபிடித்தே நடந்து வந்த குழந்தைகளான இந்திய மக்களை, சொந்தமாக நடக்கச் சொன்னால், நடப்பரா என்ற அச்சமும் என்னிடம் உண்டு.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
ph:98410 53881

