செல்வ வளத்தையும் உருவாக்கும் மூன்று வரி சேமிப்பு முதலீடுகள்
செல்வ வளத்தையும் உருவாக்கும் மூன்று வரி சேமிப்பு முதலீடுகள்
ADDED : மார் 24, 2024 10:29 PM

வரி திட்டமிடலில் ஈடுபடும் போது, வரி சேமிப்பை மட்டும் அல்லாமல் செல்வ வளத்தை உருவாக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
வருமான வரி திட்டமிடலின் முக்கியத்துவம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. திட்டமிடலின் முக்கியத்துவத்தை மீறி, பலரும் வரி சேமிப்பு முதலீட்டை கடைசி நேரத்தில் மேற்கொள்கின்றனர்.
இது தவிர்க்கப்பட வேண்டியது என்பதோடு, வரி சேமிப்பு முதலீட்டை மேற்கொள்ளும் போது, இந்த முதலீடு வளம் உருவாக்குவதற்கும் ஏற்றதாக இருக்க வேண்டியது அவசியம்.
ஏனெனில் வரி சேமிப்பை மட்டுமே மனதில் கொண்டு செயல்பட்டால் அது குறுகிய நோக்கிலானதாக அமைந்துவிடும். மாறாக எந்த முதலீட்டின் முதன்மை நோக்கம் வளத்தை உருவாக்குவது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
வரிசேமிப்பு திட்டமிடல்
முதலீட்டை தீர்மானிக்கும் போது பலவித அம்சங்களை கருத்தில் கொள்வது போல, வரிசேமிப்பு முதலீட்டின் போதும், தொடர்புடைய முக்கிய அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும்.
வரிசேமிப்பு முதலீடு என்று வரும் போது, முதலில் அவற்றுக்கான 'லாக் இன்' காலத்தை கவனிக்க வேண்டும். ஒரு சில முதலீடுகள் நீண்ட அளவிலான லாக் இன் காலம் கொண்டவை. உதாரணம், பி.பி.எப்., முதலீடு. சில முதலீடுகள் குறுகிய அளவிலான லாக் இக் கொண்டவை. முதலீட்டை விலக்கி கொள்வதற்கான குறைந்தபட்ச காலமாக லாக் இன் கட்டுப்பாடு அமைகிறது.
அதே போல, ஒரு சில முதலீடுகளில் முன்கூட்டியே விலக்கி கொள்வது நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டாலும் அதற்கான அபராதம் விதிக்கப்படலாம். இந்த அம்சங்களோடு வரி சேமிப்பு பலனையும் கவனிக்க வேண்டும்.
ஒரு சில முதலீடுகள் அவை அளிக்கும் வட்டி வருமானத்தின் மீது வருமான வரி விதிப்பு கொண்டிருக்கின்றன. இன்னும் சில முதலீடுகளில் முதிர்வு தொகை வரிவிதிப்புக்கு உட்பட்டிருக்கும். ஒரு சில முதலீடுகள், வட்டி மற்றும் முதிர்வு உட்பட மூன்று நிலைகளிலும் வரி சேமிப்பு அளிக்கும் தன்மை கொண்டிருக்கும்.
நீண்ட கால பலன்
வரி சேமிப்பு முதலீடுகள் பலவிதமான இடர் தன்மையும் கொண்டவை. உதாரணத்திற்கு இ.எல்.எஸ்.எஸ்., முதலீடு சந்தை செயல்பாட்டுடன் தொடர்புடையவை. இதே போல, காப்பீடு வகையைச் சேர்ந்த யூலிப் முதலீடும் சந்தை செயல்பாட்டுடன் தொடர்பு கொண்டது.
அதே நேரத்தில், பி.பி.எப்., முதலீடு போன்றவை நிச்சயிக்கப்பட்ட பலனை அளிக்கலாம் என்றால் வளர்ச்சி வாய்ப்பு ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கலாம். ஒரு சில முதலீடுகள் குறைந்த பட்ச முதலீடு எனும் வரம்பையும் கொண்டிருக்கலாம்.
பொதுவாக நோக்கும் போது, பொது சேமநல நிதியான, பி.பி.எப்., செல்வ மகள் திட்டம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப்., உள்ளிட்டவை பரவலாக நாடப்படும் வரிசேமிப்பு முதலீடுகளாக விளங்குகின்றன. இவற்றில், பி.பி.எப்., 80 சி பிரிவின் கீழ் வரி சேமிப்பு அளிப்பதோடு, வட்டி மற்றும் முதிர்வுக்கும் வரிச்சலுகை கொண்டவை. நீண்ட கால நோக்கில் பலன அளிக்க கூடியது. செல்வ மகள் திட்டமும் இதே போன்ற பலன் அளிப்பது.
பி.எப்., முதலீடும் வரி சேமிப்புடன் நீண்ட கால பலனை அளிக்க கூடியது. சரியான திட்டமிடல் மூலம், வரி சேமிப்புடன் செல்வ வளத்தையும் உருவாக்கி கொள்ளலாம்.

