
இலங்கை சந்தையில் புதிய கார்கள் டாடா மோட்டார்ஸ் அறிமுகம்
நம் அண்டை நாடான இலங்கையில், எலக்ட்ரிக் கார் உள்ளிட்ட புதிய கார் ரகங்களை டாடா மோட்டார்ஸ் மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது. தன் அங்கீகரிக்கப்பட்ட டீலரான டிமோவுடன் இணைந்து, பஞ்ச், நெக்ஸான் மற்றும் கர்வ் கார் ரகங்களுடன், எலக்ட்ரிக் மாடலான டியாகோ காரையும் இலங்கையில் டாடா அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச மின்சார கார்கள் வணிகப் பிரிவின் தலைவர் யாஷ் கண்டேல்வால், ''இலங்கையில் எங்களது சர்வதேச வணிக உத்தியின் புதிய அத்தியாயத்தை துவங்கி இருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க மாற்றங்களை கண்டு வரும் டாடா மோட்டார்ஸ், புதிய தயாரிப்புகளுடன் திரும்புவது சிறந்த ஒன்று,'' என தெரிவித்துள்ளார்.
பேப்பர் மற்றும் பேப்பர் அட்டை இறக்குமதி 20 சதவீதம் உயர்வு
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், பேப்பர் மற்றும் பேப்பர் அட்டை இறக்குமதி 20 சதவீதம் உயர்ந்து, 17.60 லட்சம் டன்னாக அதிகரித்து இருப்பதாக இந்திய பேப்பர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மதிப்பின் அடிப்படையில், 11,196 கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
முதல் 9 மாதங்களில், 10,000 கோடி ரூபாய்க்கு மேல் பேப்பர் இறக்குமதி செய்யப்படுவது இதுவே முதல்முறை. இதே காலத்தில், பிற நாடுகளை விட, சீனாவில் இருந்து 36 சதவீதம் அளவுக்கு பேப்பர் இறக்குமதி அதிகரித்து உள்ளது.