ADDED : மே 10, 2024 11:40 PM

புதுடில்லி:தொலைதொடர்பு துறை, 28,200 மொபைல் சாதனங்களை தடை செய்யுமாறும், 20 லட்சம் மொபைல் எண்களை மீண்டும் சரிபார்க்குமாறும், தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தொலைதொடர்பு வாயிலாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடி மற்றும் சைபர் குற்றங்களை குறைப்பதற்காக, தொலைதொடர்பு துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில காவல் துறை ஆகியவை இணைந்துள்ளன. இவை மேற்கொண்ட பகுப்பாய்வில், 28,200 மொபைல்கள் சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
அத்துடன், 20 லட்சம் மொபைல் எண்கள் இந்த மொபைல் போன்களுடன், பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, நாடு முழுதும் 28,200 மொபைல்களை தடை செய்யுமாறும், 20 லட்சம் மொபைல் எண்களை சரிபார்க்குமாறும், தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு, உத்தரவிடப்பட்டுள்ளது. தொலைதொடர்பு மோசடி தொடர்பான புகார்களை கையாள்வதற்காக, தொலைதொடர்பு துறை, இரண்டு மாதங்களுக்கு முன்பு 'சாக்ஷு' எனும் இணையதள போர்ட்டலை அறிமுகப்படுத்தியது.
இத்தளம் துவங்கப்பட்டதில் இருந்து, போலி குறுஞ்செய்திகளை அனுப்பிய 52 நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன; நாடு முழுக்க 348 மொபைல் சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 10,834 மொபைல் எண்கள் சரிபார்ப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.