கன்டெய்னர் லாரி 'மாமூல்' திடீர் உயர்வு நிரந்தர தீர்வு ஏற்படுத்த முத்தரப்பு பேச்சு
கன்டெய்னர் லாரி 'மாமூல்' திடீர் உயர்வு நிரந்தர தீர்வு ஏற்படுத்த முத்தரப்பு பேச்சு
ADDED : மார் 07, 2025 11:52 PM

திருப்பூர்:கன்டெய்னர் லாரிகள் சந்திக்கும் மாமூல் பிரச்னைக்கு, சரக்கு பெட்டக நிறுவன உரிமையாளர்களை அழைத்துப் பேசி, சுமுக தீர்வு காண, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பின்னலாடைகள், 'பேக்கிங்' செய்யப்பட்டு, துாத்துக்குடி துறைமுகம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
திருப்பூரில் உள்ள எக்ஸ்போர்ட் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் லாரிகள், அவற்றை எடுத்துச்சென்று, துாத்துக்குடியில் உள்ள, சரக்கு பெட்டகம் கையாளும் (சி.எப்.எஸ்., - கன்டெய்னர் பிரைட் ஸ்டேஷன்) நிறுவன கிடங்குகளில் ஒப்படைக்கின்றன.
சரக்கு பெட்டகம் கையாளும் கிடங்குகளில் உள்ள தொழிலாளர், சரக்கு செல்லும் பெட்டிகளை இறக்கி வைக்க, 'டீ' செலவுக்கு என்று கூறி, ஒரு லாரிக்கு, 200, 500 அல்லது 600 ரூபாய் என, 'மாமூல்' பெற்று வந்தனர்.
திருப்பூரில் இருந்து, தினசரி துறைமுகம் செல்லும், 200 லாரிகளும் இந்த தொகையை வழங்கி வருகின்றன.
கடந்த மாதத்தில் இருந்து, திடீரென, 1,200 முதல், 2,000 ரூபாய் வரை மாமூல் கேட்டு நிர்பந்தம் செய்வதாக கூறப்படுகிறது.
கடந்த 5ம் தேதி முதல், 'மாமூல்' என்ற பெயரில், மறைமுக இறக்கு கூலி வசூலிப்பதை ஏற்க மாட்டோம் என்று, வாகனங்களில் துண்டு பிரசுரம் போன்ற 'ஸ்டிக்கர்' ஒட்டி, கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
கன்டெய்னர் லாரி உரிமையாளர்களை அழைத்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், பிரச்னை குறித்து கேட்டறிந்தது. 'திருப்பூர் எக்ஸ்போர்ட் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட்டர் அசோசியேஷன்' தலைவர் பரமசிவம் மற்றும் நிர்வாகிகள், நிலைமையை விளக்கிஉள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், “கன்டெய்னர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை மனுவாக பெற்று, சரக்கு பெட்டக நிறுவன உரிமையாளர்களுடன் பேசி, சுமுக தீர்வு காணப்படும்; உரிமையாளர் சங்க நிர்வாகிகளை திருப்பூர் அழைத்து, முத்தரப்பு கூட்டம் நடத்தி, நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும்,” என்றார்.