ADDED : மார் 07, 2025 11:15 PM

வாஷிங்டன்:அமெரிக்காவில் பிட்காயின் கையிருப்பை உருவாக்குவதற்கான அரசாணையில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த இருப்பு வரி செலுத்துவோரது பணத்தை சார்ந்திருக்காது என்றும், சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பிட்காயின்களைக் கொண்டு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கிட்டத்தட்ட 2 லட்சம் பிட்காயின்கள் உள்ளன. தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் இவற்றின் இந்திய மதிப்பு 1.52 லட்சம் கோடி ரூபாய்.
இதனிடையே, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிட்காயின்களை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிட்காயின் விற்பனையால் அரசுக்கு 1.48 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இவற்றின் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இருப்பை காக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.