அதானியிடம் விற்க முயற்சியா? பேடிஎம் நிறுவனம் மறுப்பு
அதானியிடம் விற்க முயற்சியா? பேடிஎம் நிறுவனம் மறுப்பு
ADDED : மே 30, 2024 01:18 AM

புதுடில்லி: அதானி குழுமம், 'பேடிஎம்' நிறுவனத்தின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை வாங்கவுள்ளதாக வெளிவந்த செய்திக்கு, பேடிஎம் நிறுவனமும் அதானி குழுமமும் மறுப்பு தெரிவித்துள்ளன.
கடந்த ஜனவரி மாத இறுதியில், 'பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க்' சேவைகளை ரிசர்வ் வங்கி முடக்கியது. இதையடுத்து, பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்'ன் சந்தை மதிப்பு, லாபம் என அனைத்துமே பெரும் சரிவைக் கண்டது.
இந்நிலையில், பேடிஎம் நிறுவனத்தின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை, அதானி வாங்கப் போவதாக நேற்று காலை செய்திகள் வெளியாகின. மேலும், இதுதொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்ய, பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா, அதானியை அகமதாபாத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த செய்திகள் ஊகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதாகவும், நிறுவனம் யாருடனும் பேச்சு நடத்தவில்லை என்றும், பேடிஎம் அறிக்கை வெளியிட்டது. அதேபோல், அதானி குழுமமும் செய்தி தவறானது என மறுப்பு தெரிவித்தது.