பெட்ரோலில் எத்தனால் கலப்பால் ரூ.99,000 கோடி மிச்சம் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்
பெட்ரோலில் எத்தனால் கலப்பால் ரூ.99,000 கோடி மிச்சம் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்
ADDED : செப் 03, 2024 02:34 AM

புதுடில்லி:பெட்ரோலில் எத்தனாலை கலக்கும் திட்டத்தால், கடந்த 2014ம் ஆண்டு முதல் இதுவரை, 99,000 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து டில்லியில், உலக உயிராற்றல் மாநாட்டில், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேசியதாவது:
பெட்ரோலுடன் 15 சதவீதம் வரை எத்தனால் கலக்க தற்போது அனுமதி உள்ளது. இதை 2025 - 26ம் ஆண்டுக்குள் 20 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டில் இருந்து இதுவரை, 1.73 கோடி டன் கச்சா எண்ணெய் அளவுக்கு மாற்றாக, பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நடக்காமல் போயிருந்தால், அதே அளவு கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியிருந்திருக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் தூய்மையான மாற்று எரிபொருளை பயன்படுத்தும் அரசின் முயற்சியால், 5.19 கோடி டன் கார்பன் உமிழ்வு குறைக்கப்பட்டிருக்கிறது.
பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு காரணமாக, 10 ஆண்டுகளில், 99,000 கோடி ரூபாய் அன்னிய செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் 15,600 எரிபொருள் விற்பனை நிலையங்களில், தற்போது 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட 'இ-20' பெட்ரோல் கிடைக்கிறது. இதை வரும் ஆண்டுகளில் விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எத்தனால் வடிகட்டும் ஆலைகளுக்கு, இந்திய உணவு கழகத்தின் வாயிலாக, அரிசி வினியோகம் தொடங்கியுள்ளது. கரும்புச் சாறு மற்றும் பாகு ஆகியவற்றின் வினியோகம், வருகிற நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளது.
இதனால், எத்தனால் உற்பத்தி அதிகரித்து, 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை விரிவுபடுத்தப்படும்.