'யு.பி.எஸ்.சி., கனவில் நேரத்தை வீணடிப்பதா?': பிரதமரின் பொருளாதார ஆலோசகர் கவலை
'யு.பி.எஸ்.சி., கனவில் நேரத்தை வீணடிப்பதா?': பிரதமரின் பொருளாதார ஆலோசகர் கவலை
ADDED : மார் 26, 2024 10:12 PM

புதுடில்லி:“யு.பி.எஸ்.சி., என்பது நேரத்தை வீணடிக்கும் செயல். இதன் வாயிலாக கிடைக்கும் பணிகள் மந்தமாகவும், சலிப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்” என பிரதமரின் பொருளாதார ஆலோசகர் குழு உறுப்பினரான சஞ்சீவ் சன்யால் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யு.பி.எஸ்.சி., எனும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற, ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மாணவர்கள் மிகவும் கடுமையாக தங்களை தயார் படுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் இந்த கடின உழைப்புக்கு மதிப்புள்ள பணியாக யு.பி.எஸ்.சி., அமையுமா என்பது குறித்து சஞ்சீவ் சன்யால் நிகழ்ச்சியில் விரிவாக பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு போலியான அறிவுஜீவிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களும்; பீஹார் மக்களுக்கு உள்ளூர் ரவுடி அரசியல்வாதிகளுமே முன்மாதிரியாக இருந்தனர். இந்த மாதிரியான சூழலில், ஒன்று நீங்கள் உள்ளூர் ரவுடியாக மாறலாம், அவ்வாறு மாற விரும்பவில்லை என்றால், அரசு ஊழியராக ஆவதே இதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழியாக இருந்தது.
ஒரு ரவுடியாக இருப்பதை விட, அரசு பணியாளராக இருப்பது சிறந்தது என்றாலும், அதுவுமே நமது லட்சியத்தில் உள்ள வறுமையையே காட்டுகிறது. நீங்கள் கனவு காண வேண்டும் என்றால், எலான் மஸ்க் அல்லது முகேஷ் அம்பானியாக உருவாக கனவு காண வேண்டும், நீங்கள் ஏன் அரசின் இணைச் செயலராக வேண்டும் என்று கனவு காண்கிறீர்கள்?
ரிஸ்க் எடுப்பது உட்பட பலவற்றை பற்றி ஒரு சமூகம் எவ்வாறு நினைக்கிறது என்பது குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். பீஹார் போன்ற ஒரு மாநிலத்தின் பிரச்னை அம்மாநிலத்தில் மோசமான தலைவர்கள் இருந்தார்கள் என்பதல்ல; அந்த மோசமான தலைவர்கள், அச்சமூகம் எதை விரும்புகிறது என்பதன் பிரதிபலிப்பே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அதிக திறன் கொண்ட பல இளம் வயதினர் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றிபெற முயற்சித்து நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். மாணவர்கள் தேர்வு எழுதக்கூடாது என்று நான் கூறவில்லை. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு அதிகார அமைப்பு தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், லட்சக்கணக்கானவர்கள், ஒரு தேர்வில் வெற்றிபெற, தங்கள் சிறந்த ஆண்டுகளை செலவழிப்பதில் அர்த்தமில்லை என்று நினைக்கிறேன். அவர்கள் அதே ஆற்றலை வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தினால், நாம் அதிக ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வெல்லலாம்; சிறந்த மருத்துவர்கள், தொழில்முனைவோர், விஞ்ஞானிகள் என பலரை உருவாக்கலாம்.
யு.பி.எஸ்.சி., என்பதை நேரத்தை வீணடிக்கும் செயலாகவே நான் கருதுகிறேன். உண்மையிலேயே ஒரு நிர்வாகியாக இருக்க வேண்டும் என்பதில் விருப்பமில்லாதவர்கள், யு.பி.எஸ்.சி., தேர்வை எழுத வேண்டாம் என்றே நான் வலியுறுத்துவேன். அதிகாரத்துவ வாழ்க்கை என்பது எல்லோருக்குமானதல்ல. அதன் பெரும்பான்மை பகுதி, மந்தமான மற்றும் சலிப்பை ஏற்படுத்தும். கோப்புகளை மேலும் கீழும் அனுப்புவதிலேயே காலம் ஓடிவிடும். நீங்கள் உண்மையிலேயே அதைச் செய்ய விரும்பினால் தவிர, அந்த பணியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கப் போவதில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நீங்கள் கனவு காண வேண்டும் என்றால், எலான் மஸ்க் அல்லது முகேஷ் அம்பானியாக உருவாக கனவு காண வேண்டும். நீங்கள் ஏன் அரசின் இணைச் செயலராக வேண்டும் என்று கனவு காண்கிறீர்கள்?

