வாகனங்கள் விற்பனை பிப்ரவரியில் 7 சதவிகிதம் வீழ்ச்சி
வாகனங்கள் விற்பனை பிப்ரவரியில் 7 சதவிகிதம் வீழ்ச்சி
ADDED : மார் 06, 2025 11:19 PM

புதுடில்லி:பிப்ரவரி மாத வாகன விற்பனை தொடர்பான அறிக்கையை, இந்திய வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த மாத வாகன விற்பனை 7.19 சதவீதம் குறைந்து, பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 20.46 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த பிப்ரவரியில் 18.99 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, கூட்டமைப்பின் தலைவர் சி.எஸ்.விக்னேஷ்வர் கூறியதாவது:
கடந்த மாதத்தில் அனைத்து வாகன பிரிவுகளும் சரிவை சந்தித்துள்ளன. நகர்ப்புற விற்பனை சரிவை விட, கிராமப்புற விற்பனை சரிவு குறைவாக உள்ளது. மோசமான நுகர்வோர் உணர்வு, குறைந்த விசாரிப்புகள், நிதி வசதி பற்றாக்குறை, சீரற்ற வாகன இருப்பு, அதிக விலை மாற்றங்கள் ஆகியவை, இருசக்கர வாகன விற்பனையை பாதித்துள்ளன.
தற்போதைய கார்கள் கையிருப்பு, 50 முதல் 52 நாட்களாக தொடர்கிறது. மத்திய அரசின் செலவுகள் காரணமாக, டிப்பர் விற்பனை அதிகரித்துள்ளது. வர்த்தக வாகன சந்தை மார்ச் மாதம் முதல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.