ADDED : ஆக 06, 2024 07:34 AM
புதுடில்லி: கடந்த ஜூலையில், வாகன விற்பனை 13.84 சதவீதம் உயர்ந்து, நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளதாக, வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பின் துணைத் தலைவர் சி.எஸ்.விக்னேஸ்வர் கூறியதாவது:
செழிப்பான கிராமப்புற பொருளாதாரம், சாதகமான பருவமழை, புதிய அறிமுகங்கள் ஆகியவை, இரு சக்கர வாகன விற்பனையை 17 சதவீதமாக உயர்த்தி உள்ளது.
அதிக சரக்கு இருப்பு, புதிய அறிமுகங்கள் ஆகியவை பயணியர் கார் விற்பனையை, 14 சதவீதம் உயர்த்தியுள்ளது.
தள்ளுபடிகள் மற்றும் மத்திய அரசின் மின்சார போக்குவரத்து ஊக்குவிப்புத் திட்டத்தின் காலம் நீட்டிப்பு ஆகியவை, மின்சார கார் விற்பனையை அதிகரித்துள்ளது.
அதே சமயம், 67 முதல் 72 நாட்கள் வரை நீடிக்கும் 73,000 கோடி ரூபாய் மதிப்பிலான வரலாறு காணாத சரக்கு இருப்பு, சிறு கவலையை ஏற்படுத்துகிறது. கட்டு மான மற்றும் சுரங்கத் துறை வளர்ச்சியின் காரணமாக, வர்த்தக வாகன விற்பனை 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.