ADDED : ஜூன் 03, 2024 01:18 AM

மக்களவை தேர்தல் முடிவுகள் சந்தையின் போக்கில் பலவிதமாக தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதலீடு உத்தி பற்றி ஒரு அலசல்.
நாடு முழுதும் மக்களவை தேர்தல் முடிவுகளை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் நிலையில், பங்குச்சந்தையில் நாட்டம் கொண்டவர்களும் பரபரப்போடு, ஓட்டுகள் எண்ணிக்கை தினத்திற்கு காத்திருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் சந்தையின் போக்கில் தாக்கம் செலுத்தும் என்பதே இதற்கு காரணம்.
ஏற்கனவே தேர்தல் முடிவு தொடர்பான எதிர்பார்ப்பில் சந்தை ஏற்ற இறக்கமான வர்த்தகத்தை சந்தித்து வரும் நிலையில், ஓட்டுகள் எண்ணிக்கைக்கு பின் சந்தை எப்படி இருக்கும் என்பது தொடர்பான பல்வேறு கணிப்புகளும் ஆதிக்கம் செலுத்துகின்றன.
உடனடி தாக்கம்
முக்கிய நிகழ்வுகள் எப்போதுமே சந்தையின் போக்கில் தாக்கம் செலுத்தி வந்திருப்பதால், இந்திய தேர்தல் முடிவுகள் சந்தையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பாக விவாதிக்கப்படுவதில் எந்த வியப்பும் இல்லை என்கின்றனர். இந்த தாக்கம் பலவிதமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. பரவலாக எதிர்பார்க்கப்படும் முடிவு, சந்தையில் சாதகமான நிலையை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.
அதே நேரத்தில் எதிர்பாராத முடிவு, சந்தையில் திருத்தம் கொண்டு வர வாய்ப்பிருப்பதாகவும் கருதப்படுகிறது. எந்த வகையான முடிவு, எந்தெந்த துறையில் சாதக, பாதக அம்சங்களை ஏற்படுத்தும் என்றும் விவாதிக்கப்படுகிறது.
கணிப்பின் அடிப்படையில் செயல்படுபவர்கள் இந்த விவாதங்களில் ஆர்வம் காட்டினாலும், சில்லரை முதலீட்டாளர்கள் இந்த சூழலில் எந்த விதமான உத்தியை கடைப்பிடிக்க வேண்டும் எனும் கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த சூழலில் எந்த உத்தியை பின்பற்றுவது அதிக பலனளிக்கும் எனும் கேள்வியும் முதலீட்டாளர்கள் மனதில் எழுந்துள்ளது. சந்தையின் போக்கிற்கு ஏற்ப செயல்பட வேண்டும் எனும் ஆர்வம் இயல்பானது என்றாலும், முதலீடு உத்தியை பொருத்தவரை முதலீட்டாளர்கள் பரபரப்பை தவிர்த்து, நிதானமாக செயல்படுவதே ஏற்றதாக இருக்கும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
நீண்ட கால உத்தி
தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றாலும், அது குறுகிய கால தாக்கமாகவே அமையும். இதற்கேற்ப செயல்படுவது பலனை அளிக்கலாம் அல்லது பாதகமாகவும் அமையலாம். மாறாக, பொருளாதார காரணிகள், சர்வதேச விவகாரங்கள், சந்தை அடிப்படை அம்சங்கள் உள்ளிட்டவை நீண்ட கால நோக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.
எனவே, தேர்தல் முடிவு போன்ற ஒரு நாள் நிகழ்வு ஏற்படுத்தக்கூடிய குறுகிய கால தாக்கத்தை மனதில் கொள்ளாமல், நீண்ட கால இலக்குகளை முக்கியமாக கருத வேண்டும் என்கின்றனர். கணிப்பின் அடிப்படையில் முதலீடு செய்வது அல்லது முதலீட்டை தள்ளிப்போடுவது ஏற்றதாக இருக்காது என்கின்றனர்.
மக்களவை தேர்தல் முடிவுகளோடு, அரசியல் நிலைத்தன்மை, கொள்கை முடிவுகள், முதலீட்டாளர்கள் அணுகுமுறை உள்ளிட்ட அம்சங்களும் சந்தையின் போக்கை தீர்மானிக்கும். இந்த சூழலில், முதலீட்டாளர்கள் தங்கள் நிதி இலக்குகளையும், இடர் தன்மை மற்றும் முதலீடு தொகுப்பையும் முக்கியமாகக் கருதி செயல்பட வேண்டும்.
சந்தையின் போக்கை கணித்து பலன் பெற நினைப்பதை விட, குறுகிய கால நிகழ்வுகளை கடந்த நீண்ட கால அணுகுமுறையே ஏற்றதாக இருக்கும் என்கின்றனர். அந்த வகையில், முதலீட்டாளர்களும் தங்களது நிதி இலக்குகளுக்கு ஏற்ற அணுகுமுறையை கடைப்பிடிப்பதே பொருத்தமாக இருக்கும்.