உலகின் மிகப்பெரிய தாமிர ஆலை குஜராத்தில் துவக்கியது அதானி குழுமம்
உலகின் மிகப்பெரிய தாமிர ஆலை குஜராத்தில் துவக்கியது அதானி குழுமம்
ADDED : மார் 28, 2024 09:58 PM

புதுடில்லி, மார்ச் 29-
இந்தியாவின் உலோக உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், 'அதானி என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் துணை நிறுவனமான 'கட்ச் காப்பர்', 9,960 கோடி ரூபாய் மதிப்பிலான தாமிர உற்பத்தி ஆலையின் முதல் கட்டத்தை துவக்கியுள்ளது.
தாமிர இறக்குமதியை இந்தியா சார்ந்திருப்பதை குறைக்கவும், எரிசக்தி மாற்றத்திற்கு உதவும் வகையிலும், அதானி குழுமம், குஜராத்தில் உள்ள முந்த்ராவில், உலகின் மிகப்பெரிய தாமிர உற்பத்தி ஆலையின் முதல்கட்டத்தை துவக்கியுள்ளதாக தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஆலையின் வாயிலாக, ஆண்டுக்கு 5 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட தாமிரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இரண்டாம் கட்ட முடிவில், முழு அளவிலான உற்பத்தி, அதாவது பத்து லட்சம் டன் உற்பத்தி திறனை, வருகிற 2028 - 29ம் நிதியாண்டுக்குள் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதி நவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமையான பசுமை தொழில்நுட்பத்துடன் இந்த ஆலை உருவாக்கப்படுகிறது. இதன் வாயிலாக, 2,000 பேருக்கு நேரடியாகவும், 5,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உருக்கு மற்றும் அலுமினியத்துக்கு அடுத்தபடியாக, அதிகமாக பயன்படுத்தப்படும் தொழில்துறை உலோகங்களில் தாமிரம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும் வேகமாக வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், தொலைத்தொடர்பு, மின் வாகனங்கள், சார்ஜிங் உள்கட்டமைப்புகள், மின் பரிமாற்றம் மற்றும் அதன் வினியோக தொடர்புகளின் வளர்ச்சி ஆகியவற்றால் தாமிரத்தின் தேவை மேலும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவின் தாமிர உற்பத்தியால் இந்த தேவையை பூர்த்தி செய்ய இயலாமல், இறக்குமதியை அதிக அளவில் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக, தாமிர இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த நிதியாண்டில், இந்தியா அதுவரை இல்லாத வகையில் 1.81 லட்சம் டன் தாமிரத்தை இறக்குமதி செய்துள்ளது.
அதே சமயம், ஏற்றுமதி 30,000 டன் அளவுக்கு சரிவடைந்துள்ளது. இது தொற்றுக் காலத்தைவிடவும் குறைவாக உள்ளது என்று அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நிதியாண்டில், இந்தியா 1.81 லட்சம் டன் தாமிரத்தை இறக்குமதி செய்துள்ளது. ஏற்றுமதி 30,000 டன் அளவுக்கு சரிவடைந்துள்ளது.

