சிறு நகர ஸ்டார்ட் அப்களுக்கு ரூ.1 கோடி நிதி உதவி திட்டம்
சிறு நகர ஸ்டார்ட் அப்களுக்கு ரூ.1 கோடி நிதி உதவி திட்டம்
ADDED : அக் 21, 2024 12:50 AM

புதுடில்லி:சிறு நகரங்களைச் சேர்ந்த 25 புத்தாக்க நிறுவனங்களுக்கு, தலா 1 கோடி ரூபாய் வரை நிதியுதவி அளிக்க திட்டமிட்டு இருப்பதாக, 'சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆப் இந்தியா' அறிவித்து உள்ளது.
மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ், எஸ்.டி.பி.ஐ., எனப்படும் 'சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆப் இந்தியா' இயங்குகிறது.
நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், 1991ம் ஆண்டு தன்னாட்சி அமைப்பாக அது துவங்கப்பட்டது.
டில்லியில் நேற்று முன்தினம் 'இந்தியா மொபைல் காங்கிரஸ் -2024' மாநாடு நடைபெற்றது.
அதில், கரும்பு அறுவடையின் போது ஏற்படும் சவால்களை தீர்க்க, புதுமையான தீர்வை அளித்த கர்நாடகாவைச் சேர்ந்த 'சத்யுக்த் அனலிட்டிக்ஸ்' என்ற நிறுவனத்துக்கு, எஸ்.டி.பி.ஐ., சார்பில் 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
இது குறித்து, எஸ்.டி.பி.ஐ., அமைப் பின் பொது இயக்குனர் அரவிந்த் குமார் தெரிவித்ததாவது:
'லீப் 1.0' திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பதிப்பாக, இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த புத்தாக்க நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க எஸ்.டி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.
தேர்வாகும் புத்தாக்க நிறுவனத்துக்கு முதலில் 25 லட்சம் ரூபாய் அளிக்கப்படும். நிறுவனங்களின் தொடர் செயல்பாடு அடிப்படையில், 1 கோடி ரூபாய் வரை நிதியுதவி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

