1,000 ஒழுங்குமுறைகளால் சிறுதொழில் நிறுவனங்கள் அவதி செலவும், சிறை தண்டனை அச்சமும் அதிகரிப்பு
1,000 ஒழுங்குமுறைகளால் சிறுதொழில் நிறுவனங்கள் அவதி செலவும், சிறை தண்டனை அச்சமும் அதிகரிப்பு
ADDED : ஜூலை 11, 2025 12:13 AM

புதுடில்லி:நம் நாட்டில் சிறுதொழில் நிறுவனம் ஒன்றை நடத்த 1,000க்கும் அதிகமான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளதாக, அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீம்லீஸ் ரெக்டெக் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் இயங்கும் ஒரு எம்.எஸ்.எம்.இ., நிறுவனம், 998 பிரத்யேக விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. ஆண்டுதோறும் 1,450 ஒழுங்குமுறைகளை சரிவர பின்பற்றினால் தான், சுமுகமாக இயங்க முடியும் என்ற சூழல் உள்ளது. இந்த நடைமுறையை பின்பற்றுவதில் தவறு நேர்ந்தால், சிறைக்கு அனுப்பக்கூடிய 480 விதிகள் உள்ளன.
சோதனை நடவடிக்கை என்பது மேலும் ஒரு பிரச்னை. தொழிற்சாலை தனியாகவும், அலுவலகம் தனியாகவும் வைத்திருக்கும் எம்.எஸ்.எம்.இ.,க்கள் வெவ்வேறு காலகட்டத்தில் 59 வகையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.
இதில் 21 சோதனைகள் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டவை. இவை, இ.பி.எப்.ஓ., - இ.எஸ்.ஐ.சி., என பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கியவை.
ஒருங்கிணைப்பு இல்லாமலும், திரும்பத் திரும்ப நடைபெறுவதாகவும், நேர விரயம் ஏற்படுத்துவதாகவும் இவற்றில் பல இருக்கின்றன. கடைப்பிடிக்க வேண்டிய மொத்த ஒழுங்குமுறைகளில், 45 சதவீதம் தொழிலாளர் சட்டத்துக்கு சம்பந்தப்பட்டதாகவே உள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகத்தில் சிறை தண்டனை வழங்குவது தொடர்பாக மொத்தம் 26,134 விதிகள் உள்ளன
சிறுதொழிலில் ஐந்தில் இரண்டு ஒழுங்குமுறைகள், சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் உள்ளன
நாள்தோறும் சராசரியாக 42 ஒழுங்குமுறை மேம்படுத்தல்கள் அரசால் செய்யப்படுகிறது.
விதிமுறைகளை முழுதாக கடைப்பிடிக்க, சிறுதொழில் நிறுவனங்களுக்கு சராசரியாக ரூ.17 லட்சம் வரை செலவாகிறது