கடல் காற்றாலை மின்சாரம் கொண்டு வர ரூ.11,485 கோடியில் வழித்தடம் அமைப்பு
கடல் காற்றாலை மின்சாரம் கொண்டு வர ரூ.11,485 கோடியில் வழித்தடம் அமைப்பு
ADDED : மார் 12, 2024 06:53 AM

சென்னை : தமிழகத்தின் தென் மாவட்டங்களை ஒட்டிய கடலில் அமைக்கப்படும் காற்றாலை மின்சாரத்தை எடுத்து வந்து, பல்வேறு பகுதிகளுக்கு வினியோகிக்க, 11,485 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட வழித்தடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகம், குஜராத் மாநிலங்களில் உள்ள கடல் பகுதியில், 30,000 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. இதை, மத்திய புதுப்பிக்கத்தக்க மின் துறை, பல்வேறு ஆய்வுகள் வாயிலாக கண்டறிந்துள்ளது.
முதல் கட்டமாக, இரு மாநிலங்களிலும் தலா, 5,000 மெகா வாட் திறனில், கடலில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் இடையே உள்ள பகுதிகளில், கடலில் காற்றாலை மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அங்குள்ள கடல் படுகையை குத்தகை விடுவது, ஆய்வு உள்ளிட்ட பணிகள் துவங்கியுள்ளன.
கடலில் அமைக்கப்படும் காற்றாலை மின்சாரத்தை எடுத்து வந்து, பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்ய கடலிலும், நிலத்திலும் மின் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக, 1,000 மெகா வாட் மின்சாரத்தை வினியோகிக்க, திருநெல்வேலியில் உள்ள ஆவரைகுளத்தில், 400/ 230 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையம் அமைக்கப்படும்.
கடலில் பல்வேறு இடங்களில் நிறுவப்படும் காற்றாலை மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை ஒருங்கிணைத்து எடுத்து வர, கடலுக்கு அடியில், 230 கிலோ வோல்ட் ஆம்பியர் திறனில் ஏழு கேபிள்கள் அமைக்கப்படும்.
அவற்றின் வாயிலாக மின்சாரம், ஆவரைகுளம் துணைமின் நிலையத்திற்கு எடுத்து வரப்படும்.
ஆவரைகுளம் துணைமின் நிலையத்தில், 500 'மெகா வோல்ட் ஆம்பியர்' திறனில், 12 பவர் டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்படும். அவை, 5,000 மெகா வாட் கையாளும் திறன் உடையவை.
ஆவரைகுளம் துணைமின் நிலையத்தில் இருந்து, துாத்துக்குடி, கரூருக்கு மின்சாரம் எடுத்து வந்து, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.
இதற்காக, ஆவரைகுளத்தில் இருந்து துாத்துக்குடியில் உள்ள, 'பவர்கிரிட்' நிறுவனத்தின், 400 கி.வோ., துணைமின் நிலையத்திற்கு, 100 கி.மீ., மின் கோபுர வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
மேலும், ஆவரைகுளத்தில் இருந்து கரூர், புகளூருக்கு, 400 கி.வோ., துணைமின் நிலையத்திற்கு, 300 கி.மீ., வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
அவற்றுக்கான மொத்த திட்ட செலவு 11,485 கோடி ரூபாய். இந்த பணிகளை விரைவில் துவக்கி, 2030க்குள் முடிக்க மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது.

