ADDED : பிப் 13, 2024 05:47 AM

மும்பை : நிதிநெருக்கடியில் சிக்கி யுள்ள 'ஸ்பைஸ்ஜெட்' விமான நிறுவனம், 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டப் போராட்டம், நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கித்தவிக்கும் ஸ்பைஸ்ஜெட், செலவுகளைக் குறைக்கவும், தொடர்ந்து குறைந்துகொண்டே வரும் அதன் விமான சேவைகளை ஒழுங்குபடுத்தவும் இந்நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
நிறுவனத்திடம் உள்ள விமானங்களின் எண்ணிக்கையை விட, ஊழியர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், குறைந்தபட்சம் 1,400 பேரையாவது பணி நீக்கம் செய்யவுள்ளதாகவும், இதுகுறித்த இறுதி முடிவு இந்த வாரத்துக்குள் நிறுவனத்தால் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்:
நிறுவனம் லாபகரமான வளர்ச்சியை அடைவதற்காக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பது உட்பட பல நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. தற்போது ஸ்பைஸ்ஜெட்டில் கிட்டத்தட்ட 9,000 பணியாளர்கள் உள்ளனர்.
ஒட்டுமொத்த செலவுகளைக் குறைக்க பணிநீக்கங்கள் அவசியம் என்பதால், இதில் 10 முதல் 15 சதவீத பணியாளர்களை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு கணக்கிடும்போது கிட்டத்தட்ட 1,350 பேராவது வேவையை இழக்க நேரிடும். இதன் வாயிலாக ஆண்டுக்கு 100 கோடி வரை சேமிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.