ADDED : பிப் 04, 2024 01:13 AM

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத்துறை சார்பில் 13,813 கி.மீ., நீளமுள்ள சாலைகளை அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து துறைக்கான செயலர் அனுராக் ஜெயின் கூறியிருப்பதாவது:
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத்துறை சார்பில், நடப்பு நிதியாண்டில் 13,813 கி.மீ., நெடுஞ்சாலைகள் அமைப்பதன் வாயிலாக தேசிய சாதனை படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருகிற 2027 - 28ம் ஆண்டுக்குள், இருவழிப்பாதைக்கும் குறைவான தேசிய நெடுஞ்சாலைகளை அகற்றுவதை, அமைச்சகம் நோக்கமாக கொண்டுள்ளது.
இருவழிப்பாதைக்கும் குறைவான தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம், கடந்த 2012ல் 25,517 கி.மீ., ஆக இருந்தது, தற்போது 14,350 கி.மீ., ஆக உள்ளது. மேலும், நடப்பு நிதியாண் டில், சொத்துகளை பணமாக்குதல் வாயிலாக 40,000 கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில், சாலை திட்டங்களுக்கு தனியார் முதலீடுகள் அதிகமாக இருக்கும். அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளுக்குள், இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பு வசதிகள், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.