சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு சிறப்பு விமானத்தில் பறந்த ஐபோன்கள் வரியை சமாளிக்க 15 லட்சம் போன்கள் வரவழைப்பு
சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு சிறப்பு விமானத்தில் பறந்த ஐபோன்கள் வரியை சமாளிக்க 15 லட்சம் போன்கள் வரவழைப்பு
ADDED : ஏப் 10, 2025 11:29 PM

புதுடில்லி:டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு பாதிப்பை சமாளிக்க, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு, சிறப்பு சரக்கு விமானங்கள் வாயிலாக 15 லட்சம் ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனம், உலகம் முழுதும் ஆண்டுக்கு 22 கோடி ஐபோன்களை விற்பனை செய்து வருகிறது.
கவுன்டர் பாயின்ட் ஆய்வு மதிப்பீட்டின்படி, அமெரிக்காவின் மொத்த ஐபோன் இறக்குமதியில், ஐந்தில் ஒன்று இந்தியாவில் இருந்து செல்கிறது. மற்றவை, சீனாவில் இருந்து இறக்குமதியாகின்றன.
ஆப்பிள் நிறுவனம் அதிகளவில் ஐபோன் இறக்குமதிக்கு சீனாவை சார்ந்திருப்பதால், டிரம்பின் வரி விதிப்பு காரணமாக, அமெரிக்காவில் ஐபோன் விலை உயரக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்து இருந்தனர்.
இது, இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு விதிக்கப்படும் 26 சதவீதத்தை விட மிகவும் அதிகமாகும். இந்நிலையில், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பை சமாளிக்க, ஆப்பிள் நிறுவனம் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
ஆப்பிள் நிறுவனம், வரி விதிப்பை வெல்ல வேண்டும் என புதிய திட்டத்தை செயல்படுத்தியது. இதற்காக, இந்திய விமான நிலைய அதிகாரிகளிடம் பேசி, சென்னை விமான நிலையத்தில் இருந்து சுங்கத்துறை தொடர்பான சோதனை அவகாசத்தை, 30 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைத்துள்ளது. மார்ச் மாத துவக்கத்தில் இருந்து, 100 டன் திறன் கொண்ட ஆறு சரக்கு விமானங்களில் ஐபோன்கள் அமெரிக்காவுக்கு பறந்துள்ளன.
புதிய வரி விதிப்பு அமலுக்கு வந்த சில நாட்களுக்கு முன்னதாக, கடைசி விமானம் சென்றுள்ளது. பேக்கிங் செய்யப்பட்ட ஐபோன் 14 மாடல் மற்றும் அதன் சார்ஜர் கேபிள் சேர்த்து, மொத்த எடை 350 கிராம் வரும்.
அந்த வகையில், 600 டன் திறன் கொண்ட சரக்கு விமானங்கள் வாயிலாக, 15 லட்சம் ஐபோன்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

