ADDED : ஏப் 02, 2025 11:33 PM

திருப்பூர்:தமிழகத்தில், கடந்த 14 மாதங்களில், சுற்றுச்சூழல் விதிகளை மீறிய, 169 நிறுவனங்களின் இயக்கத்தை நிறுத்தி, மாசுகட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில், கடந்த ஆண்டில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திய 148 விதிமீறல் நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் இயக்கம் முடக்கப்பட்டது. அந்நிறுவனங்களின் விபர பட்டியல், மாசுகட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஜவுளி உற்பத்தி, பிரிண்டிங், கெமிக்கல், சாயம், பிளீச்சிங் சார்ந்த நிறுவனங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
நிறுவனங்கள் சுற்றுச்சூழல் விதிகளை மீறும்போது, நோட்டீஸ் வழங்கி அவற்றின் இயக்கம் நிறுத்தப்படுகிறது. குறைபாடுகளை சரிசெய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு அவகாசம் அளித்து, தற்காலிக இடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டில், விதிமீறல் தொடர்பாக, 148 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. நடப்பாண்டு ஜனவரி, பிப்ரவரி ஆகிய இருமாதங்களில் மட்டும், 21 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில், கடந்த 14 மாதங்களில் மொத்தம் 169 நிறுவனங்களின் இயக்கம் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல், 247 நிறுவனங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.