'ஆன்லைன் ஷாப்பிங்' அதிகரிப்பால் ஓராண்டில் 2 லட்சம் கடைகள் மூடல்
'ஆன்லைன் ஷாப்பிங்' அதிகரிப்பால் ஓராண்டில் 2 லட்சம் கடைகள் மூடல்
ADDED : அக் 30, 2024 12:25 AM

புதுடில்லி:ஆன்லைன் ஷாப்பிங் தளங்களின் அதீத அதிகரிப்பால் நாடு முழுதும், கடந்த ஓராண்டில் மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சம் மளிகைக் கடைகள் மூடப்பட்டதாக, அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் வினியோக நிறுவன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை:
'குயிக் காமர்ஸ்' எனப்படும் ஆன்லைன் துரித வணிகம், மிக விரைவாக, வீட்டின் பக்கத்தில் உள்ள கடைகள் மூடப்பட காரணமாகி வருகிறது.
அண்மைக்காலமாக அதிகரித்து வரும் ஆன்லைன் வணிகம், மளிகைக் கடைகள் உள்ளிட்டவற்றின் வாடிக்கையாளர்களையும், லாபத்தையும் வேகமாக இழக்கச் செய்து உள்ளது.
நியாயமற்ற சூழல்
இத்தகைய வணிகத்தின் கவர்ச்சிகரமான விலை நிர்ணயம், அதிக தள்ளுபடி ஆகியவற்றால், நியாயமற்ற, சமநிலையற்ற வணிகச் சூழல் நிலவுகிறது. இதுபோன்ற தீவிர வணிக நடைமுறைகளுடன் பொருளாதார மந்தநிலையும் பாரம்பரிய கடைகள் மூடுவதற்கு காரணமாகின்றன.
ஆன்லைன் வணிக நிறுவனங்களிடம் இருந்து தங்களுக்கு வரும் ஆர்டர்கள் சமீபகாலமாக அதிகரித்திருப்பதாகவும், இது நுகர்வோரிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காட்டுவதாகவும், நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் பண்டிகை காலத்தில் நேரடி ஆன்லைன் விற்பனை, 250 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆன்லைன் வணிகத்தால் கடை வணிகம் பாதிக்கப்பட்டு, மூடப்படும் நிலை ஏற்படுவது மெட்ரோ நகரங்களில் அதிகம். ஓராண்டில் 90,000 கடைகள் நகரங்களில் மூடப்பட்டுள்ளன.
பாதுகாக்க வேண்டும்
நடுத்தர நகரங்களில் 60,000 கடைகளும், சிறுநகரங்களில் 50,000 கடைகளும் மூடப்பட்டுள்ளன. எனவே, ஆன்லைன் வணிகத்தை முறைப்படுத்தவும் சிறுவணிகர்களை பாதுகாக்கவும் அரசு முன்வர வேண்டும்.
இதுதொடர்பாக, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நட்டா, இந்திய போட்டி ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஓராண்டில் மூடப்பட்ட கடைகள்
மெட்ரோ நகரங்கள் 90,000
நடுத்தர நகரங்கள் 60,000
சிறுநகரங்கள் 50,000
நாடு முழுதுமாக மொத்தம் 2 லட்சம் கடைகள் மூடல்
நாட்டில் மொத்தம் 1.30 கோடி சிறிய கடைகள் உள்ளன
மாறும் பாரம்பரியம்
ஆன்லைன் வணிகத்தால் சிறுவணிகங்கள் பாதிக்கப்படுவதாக எழும் புகார் நீண்ட காலமாக உள்ளது.
எனினும், காலப்போக்கில், ஆன்லைன் வணிகத்தை எதிர்கொள்ள, மளிகைக் கடைகள், டிபார்ட் மென்டல் ஸ்டோர்களும் ஆன்லைனுக்கு மாறுவது அதிகரித்துள்ளது.
பாரம்பரியமான மனக்கணக்கு, துண்டுச்சீட்டு ஆகியவற்றில் எழுதித் தருவதில் இருந்து கணினி ரசீது, துல்லிய எடைக்கேற்ற விலைப் பதிவு, வாட்ஸாப் செய்தால் வீட்டுக்கே டெலிவரி, ஓரிரு பொருட்கள் என்றாலும் வீடு தேடி சேவை என அவை மாறி வருகின்றன.