அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவிகிதம் வரி விதிப்பு ஆலை உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு
அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவிகிதம் வரி விதிப்பு ஆலை உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு
ADDED : மே 02, 2025 12:15 AM

புதுடில்லி:அரிசிக்கு மத்திய அரசு 20 சதவீத ஏற்றுமதி வரி விதித்துள்ளது. நேற்று முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், ஏற்றுமதியை ஒழுங்குபடுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரிசி ரகங்கள் மீது 20 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உணவு தானியங்களின் இருப்பை திறம்பட கையாளவும்; அதே நேரத்தில் உலகளவில் வினியோகத் தொடரில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கவும், இந்த வரி விதிப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரிசி ஏற்றுமதியில் முன்னர் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை அரசு அண்மையில் தளர்த்திய நிலையில், தற்போது ஏற்றுமதி மீது வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரிசி ஆலை உற்பத்தியாளர் சங்க செயலர் பரணிதரன் கூறியதாவது:
அரிசிக்கு ஏற்றுமதி வரி 20 சதவீதம் அறிவித்துள்ளதால், தற்போது விலையில் 23 ரூபாய் அதிகரித்து, கிலோ 130 ரூபாய் வரை விற்க வேண்டியிருக்கும். கடந்த மாதங்களில் வரியின்றி அரிசி ஏற்றுமதிக்கு, ஆலைகளில் இருந்து 'ஆர்டர்' பெறப்பட்டிருக்கும்.
தற்போது வரி விதிப்பால், சிலருக்கு பழைய விலையில் அனுப்ப இயலாத நிலையும், சிலருக்கு ஒப்பந்தப்படி அரிசி அனுப்ப வேண்டிய நிலையும் இருக்கும். ஏற்றுமதி வரியால், உள்நாட்டில் அரிசி தேக்கமடைந்து விலை குறையும். இது, ஆலை உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.