UPDATED : மார் 29, 2025 11:51 PM
ADDED : மார் 29, 2025 11:26 PM

கோல்கட்டா:வங்கிகள் கடன் வழங்கும் விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளதால், கடந்தாண்டு மார்ச் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் மட்டும், 30 லட்சம் பேர் கடன் வாங்கும் திறனை இழந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 60 நாட்களுக்கு மேலாக கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மற்றும் 3,000 ரூபாய்க்கு கூடுதலாக கடன் பாக்கி வைத்துள்ளவர்களுக்கு, கடன் வழங்குவதை வங்கிகள் நிறுத்தியுள்ளதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வாராக் கடன் அதிகரித்து வருவதால், வங்கிகள் தங்களின் கடன் வழங்கும் விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றன. இதன் காரணமாக, பொருளாதார கட்டமைப்பில் கீழே உள்ள மக்களுக்கு, முறையான வழிகளிலிருந்து கடன் கிடைப்பது இயலாத காரியமாகி வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே கடன் பெறுவது குறைந்து வரும் நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்த தவறியவர்களுக்கு, மீண்டும் கடன் வழங்கப்படாததே இதற்கு முக்கிய காரணம் என, வங்கித்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், வங்கிகளின் வணிக நடைமுறைகளும் இதற்கு அனுமதிப்பதில்லை என கூறுகின்றனர்.
இதன் காரணமாக, வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை, கடந்தாண்டு மார்ச் மாதத்தில் 8.70 கோடியிலிருந்து டிசம்பரில் 8.40 கோடியாக குறைந்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் நிலவரப்படி, வங்கிகள் வழங்கியுள்ள மொத்த கடன் 3.92 லட்சம் கோடி ரூபாய். இதில் 13 சதவீதம் வாராக் கடனாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளின் நிகர லாபம் பாதிக்கப்படுகிறது.
வாராக் கடன் பட்டியலில் உள்ளவர்களுக்கு மீண்டும் கடன் வழங்கப்படாததால், இவர்கள் கந்து வட்டி போன்ற முறையற்ற வழிகளை நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
முறையற்ற கடன் பெறுதலை தடுக்கவே அனைவருக்கும் வங்கி கடன் கிடைக்க ஏதுவாக பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் அதே சூழல் ஏற்பட்டுள்ளது.