UPDATED : அக் 21, 2026 12:00 AM
ADDED : அக் 20, 2026 11:06 PM

சென்னை: தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு, பொரி விற்பனை ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் மூட்டைகள் வரை விற்பனையாகும். ஆனால், இந்த முறை 2.10 லட்சம் மூட்டைகள் எனும் அளவுக்கு மட்டுமே விற்பனையாகியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இது 30 சதவீத சரிவாகும்.
இது குறித்து அரிசி ஆலை ஆலோசகர் முனுசாமி கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாகவே பொரியின் நுகர்வு குறைந்து வருகிறது. தற்போது வட மாநிலத்திலிருந்து ‘லாலத்’ என்ற நெல் ரகத்திலிருந்து உருவாக்கப்படும் ‘மூரி’ என்ற அரிசி பயன்படுத்தப்படுகிறது. இதன் விலை 33 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது. இதனால், ஒரு மூட்டை பொரி (6 கி லோ) 350 முதல் 380 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது. நிறுவனங்கள் இந்த ஆயுத பூஜைக்கு பொரி வாங்குவதற்கான ஆர்டர்களை குறைத்துள்ளன. குறைந்து வரும் நுகர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இந்த ஆயுத பூஜை பொரி விற்பனை 30 சதவீதம் சரிந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
