ஒரே குடையின் கீழ் 3,000 'கே.எப்.சி., பிட்சா ஹட்' கிளைகள் டொமினோஸ் வணிகத்துக்கு போட்டி ஏற்படுத்தும்
ஒரே குடையின் கீழ் 3,000 'கே.எப்.சி., பிட்சா ஹட்' கிளைகள் டொமினோஸ் வணிகத்துக்கு போட்டி ஏற்படுத்தும்
UPDATED : ஜன 03, 2026 04:32 AM
ADDED : ஜன 03, 2026 02:52 AM

புதுடில்லி: அமெரிக்காவை சேர்ந்த 'யம் பிராண்ட்ஸ்'சின் கீழ், கே.எப்.சி., பிட்சா ஹட் கிளைகளை நடத்தி வரும் சபையர் புட்ஸ்- தேவ்யானி நிறுவனங்கள், ஒரே நிறுவனமாக இணைய உள்ளன. இதனால், இந்நிறுவனம் வசம் ஒருங்கிணைந்த 3,000 கிளைகள் இருக்கும்.
இணைப்பு நடவடிக்கைக்கு தேவ்யானி - சபையர் நிறுவன இயக்குநர் குழுக்கள் ஒப்புதல் அளித்துள்ளன. சட்ட நடைமுறைகளை நிறைவு செய்ய 12 முதல் 18 மாதங்கள் ஆகும்.
![]() |
ஜெய்ப்பூரியா குடும்பத்தின் ஆர்.ஜே.குழுமத்தை சேர்ந்த தேவ்யானி குழுமம், இந்தியா, நைஜீரியா, நேபாளம், தாய்லாந்து நாடுகளில் 280 நகரங்களில் கிட்டத்தட்ட 2,400 துரித உணவக கிளைகளை நடத்துகிறது.
சபையர் நிறுவனம், 10 மாநிலங்களில் கே.எப்.சி., கிளைகளையும், 11 மாநிலங்களில் பிட்சா ஹட் உணவகங்களையும் நடத்துகிறது. தனது துணை நிறுவனங்கள் வாயிலாக இலங்கையிலும் உணவங்களை நடத்துகிறது.
ஒட்டுமொத்தமாக இரு நாடுகளிலும் சேர்த்து, 1,000 உணவகங்கள் இயக்கப்படுகின்றன.
தற்போது சபையர் நிறுவனத்தில் அதன் நிறுவனர்கள் 25.35 சதவீதப் பங்குகளை வைத்துள்ளனர். தேவ்யானி நிறுவனத்தைச் சேர்ந்த ஆர்க்டிக் இன்டர்நேஷனல், தனியாக 18.5 சதவீதப் பங்குகளை வாங்க உள்ளது.
பார்தியா குழுமத்தைச் சேர்ந்த ஜூபிலியன்ட் புட் ஒர்க்ஸ் நிறுவனம், ஆறு நாடுகளில் டொமினோஸ் உள்ளிட்ட 3,480 துரித உணவங்களை நடத்தி வருகிறது. இதற்கு போட்டியாக, ஒருங்கிணைந்த தேவ்யானி - சபையர் குழும நிறுவனம் உருவாகிறது.
இணைப்புக்கு பிந்தைய நிறுவனம், 2028 வாக்கில் சுமார் 12,200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* இணைப்புக்கு பின், முதலீட்டாளர்களுக்கு ஒவ்வொரு 100 சபையர் பங்குக்கும், 177 தேவ்யானி நிறுவன பங்குகள் கிடைக்கும்
* பங்கு பரிமாற்றம்தான் என்பதால், சபையர் புட்ஸ் பங்குகளை வைத்திருப்போர், 'மூலதன ஆதாய வரி' செலுத்த நேரிடாது


